நிலுவையில் உள்ள கடன்களை மார்ச் மாதத்திற்குள் வழங்க வேண்டும்

நிலுவையில் உள்ள கடன்களை மார்ச் மாத இறுதிக்குள் வழங்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர், வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-02-16 17:09 GMT

ஆய்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வங்கிகளின் மாவட்ட அளவிலான ஆய்வுக்குழு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசு கூடுதல் தலைமை செயலாளருமான தென்காசி எஸ்.ஜவஹர் தலைமையில் நடைபெற்றது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பேசியதாவது:-

ஆதார் எண்

கடன் வழங்கும் சில இனங்களில் 100 சதவீதத்திற்கும் மேல் இலக்கு எய்தி உள்ளது பாராட்டுக்குரியது. விவசாய கடன், தாட்கோ வங்கிக்கடன், கல்விக்கடன், மாற்றுத்திறனாளிகளுக்கு மானியக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், மாவட்ட தொழில் மைய மானிய கடன்கள், தெருவோர வியாபாரிகளுக்கான கடன் ஆகிய கடனுதவிகளை எளிய முறையில் விரைவாக வழங்க வேண்டும்.

நகராட்சி பகுதிகளில் உள்ள தெருவோர கடைகளுக்கு நகராட்சி ஆணையர்கள் சிறப்பு வங்கி கடன் முகாம் நடத்த வேண்டும். மாவட்டத்தில் உள்ள 208 ஊராட்சிகளும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தில் 4 நாட்களுக்குள் ஆதார் எண்ணை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மார்ச் மாதத்திற்குள்

மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் கண்ணுக்கு தெரியாத கேமராக்கள் அமைக்க வேண்டும். மேலும், நிலுவையில் உள்ள கடன்பெற வேண்டி வரப்பெற்றுள்ள அனைத்து விண்ணப்பங்களையும் தாமதிக்காமல் உடனுக்குடன் பரிசீலனை செய்து விரைந்து கடனுதவிகளை வழங்க வேண்டும்

மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகின்ற அனைத்து திட்டங்களும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட அதிகமாக செயல்படுத்தப்பட்டுள்தால் கூடுதல் இலக்கு நிர்ணயம் செய்து வழங்கப்பட்டுள்ளது. இது மாவட்டம் வளாச்சி பாதையில் செல்கிறது என்பதை காட்டு்கிறது. அனைத்து வங்கிகளிலும் நிலுவையில் உள்ள கடன்களை வருகிற மார்ச் மாத இறுதிக்குள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கு.செல்வராசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் முருகேசன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருண்பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்