எங்கள் வருமானம் போச்சு... கடன் சுமை அதிகமாச்சு...

பெண்களுக்கு இலவச பஸ் பயணம் வழங்கியதால், எங்கள் வருமானம் போச்சு... கடன் சுமை அதிகமாச்சு... என்று ஷேர் ஆட்டோ டிரைவர்கள் கண்ணீர் விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Update: 2022-10-09 18:45 GMT

பெண்களுக்கு இலவச பஸ் பயணம் வழங்கியதால், எங்கள் வருமானம் போச்சு... கடன் சுமை அதிகமாச்சு... என்று ஷேர் ஆட்டோ டிரைவர்கள் கண்ணீர் விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கட்டணமின்றி பயணம்

கோவையில் அவசர போக்குவரத்துக்கு கால் டாக்ஸி, ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் இருந்தபோதிலும், ஷேர் ஆட்டோக்கள் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் போக்குவரத்துக்கு மிகவும் உபயோகமாக உள்ளது. இதில் குறைந்த கட்டணம் என்பதால் பலரும் பயணிக்கிறார்கள். ஷேர் ஆட்டோக்கள் என்பது டிரைவர் மற்றும் பயணிகளின் நலன்களை கருத்தில் கொண்டு குறைந்த கட்டணத்தில் இயக்குவதே ஆகும். கோவை மாநகரில் 100-க்கும் அதிகமான ஷேர் ஆட்டோக்கள் உள்ளன. ஆவாரம்பாளையம், காந்திபுரம், டவுன்ஹால் செல்வபுரம், சரவணம்பட்டி, காளப்பட்டி, சித்ரா, ஹோப் கல்லூரி, விளாங்குறிச்சி, சிங்காநல்லூர் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இந்த ஆட்டோக்களில் கட்டணமாக ரூ.10 முதல் ரூ.20 வரை வசூலிக்கப்படுகிறது. இந்த ஷேர் ஆட்டோக்களில் தினசரி வேலைக்கு செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகள் உள்பட பல தரப்பினர் பயணம் செய்தனர்.

இந்த நிலையில் தமிழக அரசு பெண்கள் அரசு பஸ்களில் கட்டணம் இன்றி பயணிக்கலாம் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு பெண்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது பெண்கள் பெரும்பாலும் கட்டணமில்லா பஸ்களில்தான் பயணிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக ஷேர் ஆட்டோக்களில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை குறைந்தது. இதனால் டிரைவர்களின் வருமானம் குறைந்துள்ளது. மேலும் கடன் சுமையும் அதிகரித்து வருகிறது. இதனால் எங்களுக்கு வருமானமும் போச்சு...கடன் சுமையும் அதிகமாச்சு என்று கண்ணீர் விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக ஷேர் ஆட்டோ டிரைவர்கள் தெரிவித்த கருத்துகள் விவரம்:-

டீசல் விலை உயர்வு

காளியப்பன்(சுந்தராபுரம்):-

நான் கடந்த 10 ஆண்டுகளாக ஷேர் ஆட்டோ டிரைவராக உள்ளேன். கொரோனாவிற்கு முன் எங்களுக்கு ஓரளவு வருமானம் கிடைத்தது. ஆனால் அப்போது ஒரு பயணிக்கு ரூ.5 மட்டுமே கட்டணமாக பெற்றோம். அதன்பின்னர் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் சமீபத்தில் ஒரு பயணிக்கு ரூ.10 கட்டணம் நிர்ணயம் செய்து உள்ளோம். தற்போது ஷேர் ஆட்டோக்களில் பயணிக்கும் பயணிகள் எண்ணிக்கை குறைந்து உள்ளதால் எங்களது வருமானம் வெகுவாக குறைந்து விட்டது. மேலும் கடன் சுமை அதிகரித்து செல்கிறது.

தர்மசன்(புலியகுளம்):-

ஷேர் ஆட்டோக்களை தின வாடகை அடிப்படையில் ஓட்டுகிறோம். தினமும் உரிமையாளருக்கு ரூ.1,600 கொடுக்க வேண்டி உள்ளது. ஓடினாலும், ஓடாவிட்டாலும் இந்த தொகை கொடுக்கப்பட வேண்டும். டீசலுக்கு தினமும் ரூ.300 செலவாகிறது. ஒரு பயணியிடம் ரூ.10 மட்டுமே கட்டணம் வசூலிக்கிறோம். 14 பேர் வரை ஷேர் ஆட்டோவில் ஏற்றுகிறோம். ஒரு நாளைக்கு ரூ.500 மட்டுமே லாபம் கிடைக்கிறது. இதை வைத்து குடும்பத்தை சமாளிக்க வேண்டியுள்ளது. சொந்தமாக ஷேர் ஆட்டோ வைத்து இருந்தால் ஓரளவு லாபம் சம்பாதிக்கலாம்.

குடும்பம் நடத்துவது கடினம்

ராஜ்குமார்(ஆவாரம்பாளையம்):-

தமிழக அரசு அறிவித்த பெண்களுக்கான இலவச பஸ் பயண திட்டத்தினால் எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஷேர் ஆட்டோக்களில் பயணிக்கும் பெண்கள் கூட்டம் குறைந்துள்ளது. பெரும்பாலும் இந்த பஸ்களில் காத்திருந்து ஏறுகிறார்கள். அவசரத்துக்காக மட்டுமே ஷேர் ஆட்டோக்களை பயன்படுத்துகிறார்கள். கட்டணம் குறைவு, வருமானம் குறைவு, தற்போது இலவச பஸ் ஆகியவற்றால் எங்களது வாழ்வாதாரம் உயரவில்லை.

அமீர்(போத்தனூர்):-

நான் கடந்த 30 ஆண்டுகளாக லாரி டிரைவராக இருந்தேன். பின்னர் உடல்நலம் பாதிப்பு காரணமாக ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறேன். ஷேர் ஆட்டோக்களில் வருமானம் குறைந்ததால் தற்போதைய இளைஞர்கள் யாரும் ஷேர் ஆட்டோக்கள் ஓட்ட முன் வருவது இல்லை. கூட்டம் அதிகமாக இருந்தால் ஒரு நாளைக்கு லாபமாக ரூ.600 கிடைக்கும். சில நாட்களில் ரூ.300 தான் கிடைக்கும். இதை வைத்து குடும்பம் நடத்துவது கடினம். இதை சமாளிக்க கடன் வாங்க வேண்டி உள்ளது. இதனால் கடன் சுமை அதிகரிக்கிறது.

அன்பு(பி.என்.புதூர்):-

ஷேர் ஆட்டோக்களுக்கு தனியாக யூனியன் எதுவும் இல்லை. கொரோனா காலத்தில் கூட எங்களுக்கு அரசின் சலுகைகள், நிதி உதவி எதுவும் கிடைக்கவில்லை. ஆட்டோ ஓடினாலும், ஓடாவிட்டாலும் அதன் உரிமையாளருக்கு ஒருநாள் வாடகை கொடுக்க வேண்டும். எனவே அரசு எங்களை அங்கீகரித்து உரிய சலுகைகள் வழங்க வேண்டும்.

குறிப்பிட்ட தொகை மிச்சம்

பயணிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

சுசிலா(கணபதி):-

மருத்துவமனை உள்ளிட்ட அவசியமான இடங்களுக்கு செல்வதற்கு பஸ் குறிப்பிட்ட நேரங்களில் வருவதில்லை. எனவே ஷேர் ஆட்டோக்கள் உபயோகமாக உள்ளது. ரூ.10 கட்டணம் வசூலிக்கிறார்கள். இதனால் நாங்கள் பெரும்பாலான நேரங்களில் அரசு பஸ்களில் இலவச பயணம் மேற்கொள்கிறோம். இதனால் எங்களுக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை மிச்சமாகிறது.

பாலாஜி (கல்லூரி மாணவர்):-

நான் தினமும் காளப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் இருந்து வீட்டிற்கு சித்ரா வரை ஷேர் ஆட்டோவில் பயணம் செய்து வருகிறேன். இதில் எங்கு ஏறி இறங்கினாலும் ரூ.20 கட்டணம் வசூலிக்கிறார்கள். ஒரு ஆட்டோவில் 10-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுவதால் ஒருவர் மீது ஒருவர் உட்கார்ந்து கொண்டே சிரமத்துடன் பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது. சில நேரங்களில் ஷேர் ஆட்டோக்களை அதிவேகமாக இயக்குவதால் ஆபத்தான பயணமாக உள்ளது.

அச்சத்துடன் செல்லும் நிலை

நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:-

ஷேர் ஆட்டோக்கள் பெரும்பாலும் பயணிகள் ஆட்டோவாக பதிவாகி உள்ளது. ஆனால் ஷேர் ஆட்டோகளுக்கான அனுமதியை போக்குவரத்து துறை தற்போது வரை வழங்கவில்லை. ஒவ்வொரு ஷேர் ஆட்டோக்களிலும் குறைந்தபட்சம் 12 நபர்கள் வரை ஏற்றிகொண்டு சாலையில் செல்வதை காண முடிகிறது. கோவையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் செல்லாததால் பொதுமக்கள் ஷேர் ஆட்டோக்களை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. ஷேர் ஆட்டோக்களில் டிரைவரின் இருக்கைக்கு இருபுறமும் பயணிகளை ஏற்றுகிறார்கள். பின்புறமும் அதிகமானோரை ஏற்றிக்கொண்டு பயணிக்கின்றனர். இது போன்ற ஷேர் ஆட்டோக்களில் விபத்து ஏற்பட்டால் பயணிப்பதற்கு காப்பீடு பெறுவதிலும் சிரமம் உள்ளது. பொதுமக்களும் போதிய பஸ்கள் இல்லாததால் ஷேர் ஆட்டோவில் இட நெருக்கடியில் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக அதிகளவில் ஆண்கள் ஏறும்போது, அதில் பெண்கள் பயணிக்க சிரமமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்