நமது முன்னோர் வழக்காடு மன்றத்தை உருவாக்கி நீதியை நிலைநாட்டி இருக்கிறார்கள்
வெள்ளைக்காரர்கள் நம் நாட்டை ஆள்வதற்கு முன்பாகவே நமது முன்னோர்கள் வழக்காடு மன்றத்தை உருவாக்கி நீதியை நிலை நாட்டி இருக்கிறார்கள் என்று திருவெண்ணெய்நல்லூரில் நடைபெற்ற விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி வெங்கடேசன் கூறினார்.
திருவெண்ணெய்நல்லூர்
திறப்பு விழா
திருவெண்ணெய்நல்லூரில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தற்காலிகமாக பஸ்நிலையம் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் செயல்படுகிறது. இதற்கான திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு வந்த அனைவரையும் விழுப்புரம் முதன்மை சார்பு நீதிபதி ஜெயபிரகாஷ் வரவேற்றார்.
விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி(பொறுப்பு)ஜெ.வெங்கடேசன் கலந்துகொண்டு மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தை திறந்து தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறிதாவது:-
வழக்காடு மன்றமே சாட்சி
வெள்ளைக்காரர்களால் தான் நம் நாட்டில் நீதிமன்றம் உருவானது என்று கூறிவரும் நம் மக்கள், வெள்ளைக்கார்கள் நம் நாட்டை ஆள்வதற்கு முன்பாகவே நமது முன்னோர்கள் வழக்காடு மன்றத்தை உருவாக்கி நீதியை நிலைநாட்டி வைத்திருந்தார்கள். இதற்கு உதாரணம் இந்த திருவெண்ணெய்நல்லூரில் உள்ள சிவன் கோவில் வழக்காடு மன்றமே சாட்சி. புராணத்தில் சுந்தரரின் திருமணத்தின்போது சிவன் முதியவர் வேடத்தில் வந்து சுந்தரர் தனக்கு அடிமை என்றும், அதனால் என் அனுமதி இல்லாமல் இந்த திருமணம் நடக்க கூடாது என்று கூறினார். அதற்கு அங்கிருந்த உறவினர்களும், பொதுமக்களும் தாங்கள் கூறுவதை உண்மை என்று எப்படி நம்புவது என கேட்க, அதற்கு அந்த முதியவர் நீங்கள் வழக்காடு மன்றம் வாருங்கள் நான் வழக்காடு மன்றத்தில் அதை நிரூபிக்கிறேன் எனக் கூறினார்.
ஓலைச்சுவடி
சுந்தரரின் திருமணத்திற்கு வந்த உறவினர்களும், பொதுமக்களும் வழக்காடு மன்றத்தில் குவிந்தனர். அப்பொழுது சுந்தரரின் முன்னோர்கள் அடிமை சாசனம் எழுதிக்கொடுத்த ஓலைச்சுவடியை வழக்காடு மன்றத்தில் காண்பித்தார். அப்போது அந்த ஓலைச்சுவடியில் உள்ள கையெழுத்தும், தங்களது முன்னோர்கள் கையெழுத்தும் ஒப்பீடு செய்து பார்க்கும் போது அது தங்களுடைய முன்னோர்களின் கையெழுத்து தான் என சுந்தரின் உறவினர்கள் ஒப்புக்கொள்கின்றனர். சுந்தரின் திருமணம் நிறுத்தப்பட்டது. அப்பொழுது முதியவர் வேடத்திலிருந்து சிவன் அங்கிருந்து மறைகிறார்.
எனவே கடவுளே இங்குள்ள வழக்காடு மன்றத்தில் வழக்காடிய இந்த புனித மண்ணில் ஓர் நீதிமன்றம் அமைவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மண்ணில் நீதிமன்றம் அமைக்க பாடுபட்ட மாவட்ட முதன்மை நீதிபதியின் உழைப்பு அளப்பரியது.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், சங்கராபுரம் நீதிமன்றத்தை சேர்ந்த நீதிபதிகள், வக்கீல்கள், வக்கீல் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் புஷ்பராணி நன்றி கூறினார்.