விபத்தில் மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்

பெரம்பலூரில் நடந்த விபத்தில் மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானமாக பெற்றதில் 3 பேர் மறுவாழ்வு பெற்றனர்.

Update: 2022-11-09 18:45 GMT

தொழிலாளி

பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தை சேர்ந்த 52 வயதுடைய கூலித் தொழிலாளி. இவர் கடந்த 5-ந்தேதி காலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்தபோது, அவருக்கு மூளை செயலிழப்பு ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அந்த மருத்துவமனை சார்பாக டாக்டர்கள் அவரது குடும்பத்தினரிடம் உடல் உறுப்பு தானம் பற்றி எடுத்துரைத்தனர்.

இருதயம்-2 சிறுநீரகங்கள் தானம்

அதனை புரிந்து கொண்ட குடும்பத்தினர் இறந்தவரின் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க சம்மதித்தனர். அதனை தொடர்ந்து தமிழக அரசின் உறுப்பு மாற்று ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட்டு, ஆணையத்தால் நியமிக்கப்பட்ட மருத்துவக்குழுவுடன் ஒருங்கிணைந்து மூளைச்சாவு அடைந்தவரின் 2 சிறுநீரகங்கள் மற்றும் இருதயம் அதே மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் மூலம் எடுக்கப்பட்டு 3 வெவ்வேறு நோயாளிகளுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இதில் ஒரு சிறுநீரகம், அதே மருத்துவமனையில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவருக்கு பொருத்தப்பட்டது. மற்றொரு சிறுநீரகம் சிறப்பு ஆம்புலன்சு மூலம் கொண்டு செல்லப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை நோயாளிக்கும், அதேபோல் இருதயமும் ஆம்புலன்சு மூலம் கொண்டு செல்லப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை நோயாளிக்கும் பொருத்தப்பட்டது.

3 பேர் மறுவாழ்வு

இவர்கள் அனைவரும் தமிழக அரசின் உறுப்பு மாற்று ஆணையத்தில் முன்பதிவு செய்யப்பட்டு வரிசையில் காத்திருந்த நோயாளிகள் ஆவார்கள். உடல் உறுப்பு தானம் பெற்ற3 நோயாளிகளும் தற்சமயம் நல்ல நிலையில் உள்ளனர். இவ்வாறு மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சை மூலம் முறையாக உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டு வெவ்வேறு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவே முதல் முறையாகும். விபத்தில் மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானமாக கொடுத்ததின் மூலம் 3 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்