271 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வங்கி கணக்கில் செலுத்தும் ஆணை
செம்பனார்கோவிலில் 271 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வங்கி கணக்கில் செலுத்தும் ஆணையை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்
திருக்கடையூர்:
செம்பனார்கோவிலில் 271 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வங்கி கணக்கில் செலுத்தும் ஆணையை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்
புதுமைப் பெண் திட்டம்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி வைத்தார்.அதன்படி மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவிலில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு பள்ளியில் பயின்று மேற்படிப்பு பயிலும் 271 மாணவிகளுக்கு தலா ரூ.1000 உதவித்தொகை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தும் ஆணைகளை சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்
மயிலாடுதுறை மாவட்டத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு பெண் அடிமைத்தனம் ஏற்பட்டபோதும், தேவதாசி முறை எதிர்ப்பிலும் ஈடுபட்ட பெண் சீர்திருத்தவாதி மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் பெயரில் தொடங்கப்பட்ட இத்திட்டம் தமிழகம் முழுவதும் கிடைக்கபெற்றாலும், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மாணவிகளுக்கு இத்திட்டம் சென்றடைவது சிறப்பு வாய்ந்து.வரலாற்றில் மிக முக்கிய இடம்பெற்றுள்ள மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் நினைவாக கருணாநிதி தான் பெண்களின் கல்விக்காக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டத்தை கொண்டு வந்தார்.
ரூ.42 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கிடு
அவரது வழியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொறு துறையிலும், குறிப்பாக கல்வித்துறையில் தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பள்ளிகல்வித்துறைக்கு ரூ.36.500 கோடியும், உயர் கல்வித்துறைக்கு ரூ.5.500 கோடியும் என மொத்தம் ரூ.42 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி உள்ளார்.வறுமையால் உயர் கல்வி படிக்க முடியாத நிலையிலுள்ள மாணவிகள் 100 சதவீதம் உயர் கல்வி படிக்க வேண்டும் என்பதற்காகவே முதல்-அமைச்சர் இத்திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.
20 மணி நேரம் பாடுபடுகிறார்
இதுபோன்ற நல்ல திட்டங்களை செயல்படுத்துவதற்காகவும், தமிழக மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காகவும் தினமும் 20 மணி நேரமும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அயராது பாடுபட்டு வருகிறார். இவ்வாறு கூறினார்.இதில் மாவட்ட கலெக்டர் லலிதா, எம்.எல்.ஏக்கள் பன்னீர்செல்வம், ராஜகுமார், மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் உமாமகேஸ்வரி சங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், செம்பனார்கோவில் ஒன்றியக்குழுத் தலைவர் நந்தினி ஸ்ரீதர், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் காமாட்சி மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.