கூடலூர் கல்வி மாவட்ட அலுவலகத்தை ஊட்டிக்கு மாற்ற எதிர்ப்பு-காலவிரையம் ஏற்படும் என ஆசிரியர்கள், பொதுமக்கள் கருத்து

கூடலூர் கல்வி மாவட்ட அலுவலகத்தை ஊட்டிக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்ததோடு, காலவிரையம் ஏற்படும் என ஆசிரியர்கள், பொதுமக்கள் கூறினா்.

Update: 2022-09-22 18:45 GMT

கூடலூர்

கூடலூர் கல்வி மாவட்ட அலுவலகத்தை ஊட்டிக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்ததோடு, காலவிரையம் ஏற்படும் என ஆசிரியர்கள், பொதுமக்கள் கூறினா்.

மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம்

அடர்ந்த வனமும், பச்சை தேயிலைத் தோட்டமும் என இயற்கையை தன்னகத்தே கொண்ட நீலகிரியில் ஆதிவாசி மக்கள், தோட்ட மற்றும் கூலி தொழிலாளர்கள், தேயிலை, காய்கறி விவசாயிகள் என பல தரப்பினரும் வசித்து வருகின்றனர். மாவட்டத்தின் கடைசி எல்லையில் கேரளா- கர்நாடகா மாநிலங்கள் இணையும் பகுதியில் கூடலூர் அமைந்துள்ளது. ஊட்டியில் இருந்து 52 கி. மீட்டர் தொலைவில் 3 மாநிலங்களை இணைக்கும் மையமாக கூடலூர் அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், குன்னூர் என 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன.

அதன்படி கூடலூர் ஆர்.டிஓ, தாலுகா, தோட்டக்கலைத்துறை, ஊராட்சி ஒன்றியம், நீதிமன்றம், நகராட்சி, மாவட்ட வன அலுவலகம் உள்பட அனைத்து துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி அருகே மாவட்ட கல்வி அலுவலகமும் உள்ளது. இதன் கட்டுப்பாட்டில் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியைச் சேர்ந்த சுமார் 40-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளது. இதில் 12 மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. மேலும் 10,944 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

ஊட்டிக்கு மாற்ற எதிர்ப்பு

கூடலூரில் இருந்து சுமார் 48 கி.மீட்டர் தொலைவில் தாளூர், சோலாடி, நம்பியார் குன்னு, அய்யன்கொல்லி உள்பட பல்வேறு பகுதிகள் உள்ளது. இதனால் கூடலூரை தலைமையிடமாக கொண்டு மாவட்ட கல்வி அலுவலர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கூடலூரில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தை ஊட்டிக்கு மாற்றுவதற்கான உத்தரவு துறை ரீதியாக அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு அந்தப்பகுதி பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்கள். மேலும் துறை ரீதியான பணிகளுக்கு ஆசிரியர்கள் அனைவரும் ஊட்டிக்கு சென்று வரும் நிலை ஏற்படும். அதனால் காலவிரயம் ஏற்படுவதுடன் மாணவர்களை வழி நடத்துவதற்கான பணியும் பாதிக்கப்படும் என ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

கைவிட வேண்டும்

கூடலூர் எஸ்.கே. ராஜ்:- கூடலூரில் 1997 முதல் மாவட்ட கல்வி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட மற்றும் தொடக்க கல்வி அலுவலகங்கள் மறு சீரமைப்பு செய்யும் தீர்மானத்தின்படி கூடலூர் கல்வி மாவட்டத்தை ஊட்டியுடன் இணைக்கப்படுகிறது. சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் கூடலூர் கல்வி மாவட்டத்தை மாற்றுவதால் மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாவார்கள். காரணம் சமவெளிப் பகுதியை போல இல்லாமல் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாவில் பயண நேரம் அதிகம்.

பெரும்பாலும் பேருந்து வசதிகள் மிகவும் குறைவாகவும் உள்ள பகுதிகளாகும். கல்வி சார்ந்த ஆய்வு பணிகள், மேம்பாடு, வளர்ச்சி, தேர்வு சம்பந்தப்பட்ட பலவேறு பணிகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு கூடலூரில் இருந்து ஊட்டி செல்வது அலைச்சலை அதிகரிக்கும். பள்ளிகள் சம்பந்தமான அலுவல் பணிகளுக்காக ஆசிரியர்கள் உதகை சென்று வர ஒரு நாள் ஆகி விடும். இதனால் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் பணிகள் பாதிக்கும். என்பதும், அன்றாட பணிகள் பாதிக்கும். எனவே கூடலூரில் இருந்து ஊட்டிக்கு மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தை மாற்றும் முடிவை கைவிட வேண்டும்.

பந்தலூர் இந்திரஜித்:- கல்வி மாவட்ட அலுவலகத்தை ஊட்டிக்கு மாற்றுவதால் அரசு பள்ளிகள் கண்காணிப்பு இல்லாமல் போகும் சூழல் உருவாகும். மாணவர்களுக்கு புத்தகம், நோட்டுகள், சீருடைகள் அனைத்தும் ஊட்டியில் இருந்து எடுத்து வரவேண்டிய நிலை ஏற்படும். மாணவர்களின் சான்றிதழ்கள் தொலைந்தால் ஊட்டிக்கு சென்று பெற வேண்டிய நிலை ஏற்படும். அடிக்கடி நடத்தப்படும் ஆய்வு மற்றும் சிறப்பு கூட்டங்களுக்கு ஆசிரியர்கள் காலையிலேயே ஊட்டிக்கு புறப்பட்டு சென்று மாலையில் தான் வர முடியும். மேலும் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் இன்னும் குறைந்து விடும். கூடலூரில் இருந்து எருமாடு, அம்பலமூலா போன்ற எல்லையோர பள்ளிகள் 50 கி. மீட்டர் தூர தொலைவில் உள்ளது. இதில் மாவட்ட கல்வி அலுவலகத்தை ஊட்டிக்கு மாற்றினால் இன்னும் 50 கி. மீட்டர் தூரம் அதிகமாகும். இதனால் மாவட்ட கல்வி அலுவலர் கண்காணிப்பு இல்லாமல் ஆசிரியர்கள் பள்ளியில் உள்ளார்களா என்கிற நிலையை அறிய முடியாத நிலை ஏற்படும்.

அதிக மாணவர்கள் படிக்கின்றனர்

கூடலூர் முகமது கனி:- நீலகிரி மாவட்டத்திலேயே அரசு பள்ளிக்கூடங்களில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் கூடலூர் கல்வி மாவட்டத்தில் மட்டுமே படித்து வருகின்றனர். இதை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால் கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சிறந்த மாதிரி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது தகைசால் பள்ளியாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கூடலூரில் மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் அலுவலர்கள் பணியாற்றுவதால் அரசு பள்ளிகள் மீது பெற்றோருக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே மாணவர்கள் சேர்க்கையும் அதிகரித்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதுகாப்பற்ற சூழல்

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் அன்பழகன் கூறியதாவது:- கூடலூர் கல்வி மாவட்ட அலுவலர் அலுவலகத்தை ஊட்டிக்கு மாற்றுவதால் ஆசிரியர்கள் மட்டும் இன்றி மாணவர்கள், பெற்றோர் சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இதை கருத்தில் கொண்டு 1997-ம் ஆண்டு கூடலூரில் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் தொடங்கப்பட்டது. நிர்வாக காரணங்களுக்காக அலுவலகம் மாற்றப்படுவது சமவெளி பகுதியாக இருந்தால் ஏற்கக்கூடியது.

ஆனால் மலைபிரதேசத்தில் சாத்தியமில்லாதது. காரணம் போக்குவரத்து வசதி கிடையாது. வனவிலங்குகள் நடமாட்டம் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது. இணையதள சேவை முழுமையாக பெற முடியவில்லை. இவ்வாறு பல்வேறு பிரச்சனைகள் உள்ள நிலையில் பெற்றோர், மாணவர் ஊட்டிக்கு சென்று மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணிகளை முடித்து விட்டு கூடலூருக்கு இரவு தான் வந்து சேர முடியும். ஆனால் பந்தலூர், அம்பலமூலா உள்ளிட்ட பகுதிக்கு செல்பவர்கள் தங்களது வீடுகளுக்கு பாதுகாப்பற்ற சூழலில் மிக தாமதமாக செல்லும் நிலை ஏற்படும். எனவே அதிகாரிகள் கருத்தில் கொண்டு கூடலூரில் மாவட்ட கல்வி அலுவலகம் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்