டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு

செந்துறையில் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

Update: 2022-06-29 18:39 GMT

அரியலூர் மாவட்டம் செந்துறை உடையான்குடிகாடு ரெயில்வே கேட் அருகே அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பெண்களின் தொடர் போராட்டம் காரணமாக செந்துறை தாலுகாவில் உள்ள 8 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இதனால் செந்துறை தாலுகா தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் இல்லாத தாலுகாவாக இருந்தது. இந்த நிலையில் அதே பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி தி.மு.க. பிரமுகர் ஒருவரது விவசாய நிலத்தில் கட்டிடம் கட்டி கொடுத்து முதன் முதலில் செந்துறை தாலுகாவில் டாஸ்மாக் கடையை அதிகாரிகள் திறந்தனர். அதனைத் தொடர்ந்து செந்துறை பகுதிகளில் படிப்படியாக ஆங்காங்கே பல டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் செந்துறை தாலுகாவில் முதன் முதலில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை அருகே மற்றொரு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால் டாஸ்மாக் கடை ஊழியர்கள் அந்த கடையை இழுத்து மூடிவிட்டு வேறு ஒரு இடத்தில் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்தனர்.

இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு பிறகு ஏற்கனவே இயங்கி வந்த டாஸ்மாக் கடையை புதுப்பித்து பார் வசதிகளையும் ஏற்படுத்தி விட்டு கடையினை தங்களது இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று டாஸ்மாக் அதிகாரிகளிடம் கூறி உள்ளனர். அதனைத் தொடர்ந்து டாஸ்மாக் அதிகாரிகள் நேற்று அந்த கடையை இடமாற்றம் செய்ய வந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், டாஸ்மாக் கடை இருக்கும் இடத்தின் உரிமையாளர் உறவினர்கள் மற்றும் பெண்கள் டாஸ்மாக் கடை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டம் நடத்திய பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் அந்த கடையை தற்போது இடமாற்றம் செய்ய மாட்டோம் என்று கூறினார்கள். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்