8 கிராமங்களை நகராட்சியில் இணைப்பதற்கு எதிர்ப்பு

வந்தவாசியில் நகராட்சியுடன் 8 கிராம ஊராட்சி மன்றங்களை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2023-06-09 12:21 GMT

வந்தவாசி

வந்தவாசியில் நகராட்சியுடன் 8 கிராம ஊராட்சி மன்றங்களை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

நகராட்சியுடன் இணைப்பு

வந்தவாசி தாலுகாவுக்குட்பட்ட சென்னாவரம், பாதிரி, கீழ்சாத்தமங்கலம், செம்பூர், மாம்பட்டு, மும்முனி, வெண்குன்றம், பிருதூர் ஆகிய 8 வருவாய் கிராமங்கள் வந்தவாசி நகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டு அனுப்புமாறு அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு மாவட்ட நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் ச.அண்ணாதுரை கடந்த மாதம் கடிதம் அனுப்பி இருந்தார்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை

இந்த நிலையில் வந்தவாசி நகராட்சியுடன் தங்கள் கிராமங்களை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் எஸ்.வீரராகவன் (சென்னாவரம்), வெ.அரிகிருஷ்ணன் (பாதிரி), மு.திவ்யா (கீழ்சாத்தமங்கலம்), ர.சித்ரா (செம்பூர்), ச.தேன்மொழி (மாம்பட்டு) ஆகியோர் தலைமையில் அந்தந்த கிராமங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்ைத முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

வரி உயரும்

நகராட்சியுடன் எங்கள் கிராமங்களை இணைந்தால் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் பறிபோகும். இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். விவசாய நிலங்கள் அனைத்தும் வீட்டுமனைகளாக மாறும் அபாயம் உள்ளதால் விவசாயம் பாதிக்கப்படும்.

ஊராட்சிகளுக்கு மத்திய, மாநில அரசு வழங்கும் சிறப்பு நிதியை நாங்கள் இழக்க நேரிடும். சொத்து வரி, குடிநீர் கட்டணம் ஆகியவை உயரும். எனவே நகராட்சியுடன் எங்கள் கிராமங்களை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளிக்க வந்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதைத்தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்று மேலாளர் மாணிக்கவரதனிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்