மகளுக்கு வங்காள தேச குடியுரிமை வழங்க எதிர்ப்பு; தந்தை தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவு

மகளுக்கு வங்காள தேச குடியுரிமை வழங்க எதிர்ப்பு தெரிவித்து தந்தை தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

Update: 2022-08-19 14:45 GMT

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் வினோத் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "எனது மகள் ஹர்ஷிதாவை வலுக்கட்டாயமாக முஸ்லீம் மதத்துக்கு மாற்றி, வங்காள தேசத்துக்கு கடத்தி சென்று விட்டனர், தற்போது அவர் வங்காள தேசத்தின் குடியுரிமை கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார். அவரை இந்திய குடியுரிமையை துறக்க அனுமதிக்கக் கூடாது. வங்காள தேச குடியுரிமை பெறுவதற்கு தடையில்லா சான்று வழங்கக்கூடாது என்று மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,

மனுதாரர் ஏற்கனவே தன் மகளை மீட்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விசாரணையின்போது காணொலி காட்சி வாயிலாக ஆஜரான அவரது மகள் ஹர்ஷிதா, தான் சொந்த விருப்பத்தின்படி மதம மாறியதாகவும், தன் கணவருடன் வங்காள தேசத்தில் வசிப்பதாகவும் கூறியுள்ளார். இதை பதிவு செய்து, அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அதேபோல, மனுதாரர் கொடுத்த புகாரின்படி விசாரணை நடத்திய தேசிய புலனாய்வு முகமை, புகாரை முடித்து வைத்து விட்டது என்று மத்திய அரசு தரப்பு வக்கீல் கூறினார். இதை பதிவு செய்து கொண்டு, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்