பள்ளியில் 2 அலுவலகங்கள் கட்ட எதிர்ப்பு; மாணவர்களுடன் பெற்றோர் போராட்டம்

நெல்லிக்குப்பம் அருகே பள்ளியில் 2 அலுவலகங்கள் கட்ட எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களுடன் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-14 18:45 GMT

நெல்லிக்குப்பம்:

நெல்லிக்குப்பம் அருகே எய்தனூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் புதிதாக ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு மாணவர்களின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் மாணவர்களுடன் பெற்றோர் பள்ளிக்கூடம் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் நெல்லிக்குப்பம் போலீசார் மற்றும் அண்ணாகிராமம் வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரா விரைந்து சென்று மாணவர்களின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை

அப்போது மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், பள்ளிக்கூட விளையாட்டு மைதானத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் கட்டினால் மாணவர்கள் எங்கே சென்று விளையாடுவார்கள். எனவே புதிய அலுவலகங்கள் கட்டக்கூடாது. மீறி கட்டினால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றனர்.

அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரா, உங்களது கோரிக்கை தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்