சாலை மறியலில் ஈடுபட்ட ஆபரேட்டர்கள்

அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதால், திண்டுக்கல்லில் ஆபரேட்டர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-21 15:49 GMT

சாலை மறியல்

திண்டுக்கல் மாவட்டத்தில் 1,200-க்கும் மேற்பட்ட அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் உள்ளனர். இவர்கள் மூலம் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேபிள் டி.வி. இணைப்புகள் வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பின்புறம் செயல்படும் அரசு கேபிள் டி.வி. அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

பின்னர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து பழனி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பு சேவை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கலெக்டரிடம் மனு

இதுகுறித்து தகவலறிந்த திண்டுக்கல் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பு செய்திட வேண்டும் என்று கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பேசிய போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

அதன் பின்னர் அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட டிஜிட்டல் கேபிள் டி.வி. மற்றும் இன்டர்நெட் ஆபரேட்டர்கள் சங்கம் சார்பில் நேற்று கலெக்டர் விசாகனிடம் மனு கொடுக்கப்பட்டது.

பழனியில் திரண்ட ஆபரேட்டர்கள்

இதேபோல் பழனி பகுதியை சேர்ந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் 50-க்கும் மேற்பட்டோர் பழனி ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் பழனி மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் அரசு கேபிள் டி.வி. செட்டாப் பாக்ஸ்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அங்கிருந்த அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.

இதனையடுத்து அங்கு வந்த ஆர்.டி.ஓ. சிவக்குமார், தாசில்தார் சசி ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அரசு கேபிள் டி.வி. சேவை பாதிப்பு தமிழகம் முழுவதும் உள்ளது. இதில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றனர். அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்