கோத்தகிரியில் அனுமதியின்றி பொக்லைன் எந்திரங்கள் இயக்கம்-உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
கோத்தகிரியில் அனுமதியின்றி பகல் மற்றும் இரவு நேரங்களில் பொக்லைன் மற்றும் மினி பொக்லைன் எந்திரங்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் ேகாரிக்கை விடுத்து உள்ளனர்.
கோத்தகிரி
கோத்தகிரியில் அனுமதியின்றி பகல் மற்றும் இரவு நேரங்களில் பொக்லைன் மற்றும் மினி பொக்லைன் எந்திரங்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் ேகாரிக்கை விடுத்து உள்ளனர்.
முறையான அனுமதி பெற வேண்டும்
நீலகிரி மாவட்டம் மலைப் பகுதியாக உள்ளதாலும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாலும், மாவட்டத்தில் உரிய அனுமதி இன்றி பொக்லைன் எந்திரத்தைப் பயன்படுத்தி, மண்ணை வெட்டி எடுக்கவும், பாறைகளை உடைத்து கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும், மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மீறி பயன்படுத்தும் பொக்லைன் உரிமையாளர் மற்றும் நில உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் அம்ரித் எச்சரித்துள்ளார். மேலும் விவசாய பணிகளுக்கு மினி பொக்லைன் எந்திரம் மற்றும் டிராக்டர் பயன்படுத்த வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட துறையிடம் முறையான அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறை அமுலில் உள்ளது. இந்த தடை உத்தரவை மீறி, எவ்வித அனுமதியும் பெறாமல் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பொக்லைன் எந்திரங்கள் மற்றும் மினி பொக்லைன் எந்திரங்கள் மற்றும் டிராக்டர்களை ஒரு சிலர் அத்துமீறி பயன்படுத்தி வருகின்றனர்.
மண்சரிவு அபாயம்
இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக கோத்தகிரி அருகே உள்ள நாரகிரி, அரவேனு மஞ்சமலை பகுதி, கொட்டகம்பை, ஹாவுக்கல் உள்பட பல பகுதிகளில் எவ்வித அனுமதியும் இன்றி தேயிலைத் தோட்டங்களுக்குள் கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதற்காக சாலை அமைக்கும் பணி, கட்டுமானத்திற்காக செடிகளை வேருடன் பிடுங்கி நிலத்தை சமன்படுத்தும் பணி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், பருவமழை நேரத்தில் மண்சரிவு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது.
நள்ளிரவில் அனுமதியின்றி...
இது குறித்து சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:- விவசாய பணிக்கு என அனுமதி பெற்று, கட்டுமானப் பணிக்கு பொக்லைன் எந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பொக்லைன் எந்திரம் பயன்படுத்த முறையான அனுமதி பெற்றால் கூட, அரசு விடுமுறை நாட்களைத் தவிர பிற நாட்களில், அதுவும் அலுவலக நேரத்தில் மட்டுமே எந்திரத்தை பயன்படுத்தி பணியை செய்ய வேண்டும். ஆனால் நள்ளிரவில் அனுமதியின்றி எந்திரங்கள் பயன்படுத்துவதால், அதன் சத்தம் காரணமாக பொதுமக்களின் தூக்கம் பாதிக்கப்படுகிறது. மேலும் பணியைத் தடுக்க செல்லும் அதிகாரிகளை பொக்லைன் ஓட்டுனர்கள் தாக்கிய சம்பவங்களும், மிரட்டல் விடுப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட அனுமதியின்றி இயக்கப்பட்ட மினி பொக்லைன் உரிமையாளர் மீது வருவாய்த்துறையினர் கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிகிறது. எனவே அனுமதியின்றி பொக்லைன் மற்றும் மினி பொக்லைன் எந்திரங்களை பயன்படுத்துவதைத் தடுக்க வருவாய்த்துறை, தோட்டக்கலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.