மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்காக தண்ணீரை திறந்து வைக்கிறார்.

Update: 2023-05-27 17:42 GMT

மேட்டூர் அணை

காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசன நீர் ஆதாரமாக மேட்டூர் அணை உள்ளது. இந்த அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அணையில் நீர் இருப்பை பொறுத்து ஜூன் 12-ந் தேதிக்கு முன்னதாகவோ அல்லது காலதாமதமாகவோ தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

குறுவை சாகுபடி

இந்த நிலையில் நடப்பாண்டில் கோடை காலத்திலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் நீடித்து வருகிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு காவிரி டெல்டா பாசனத்துக்கு குறித்த நேரத்தில் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதால் குறுவை சாகுபடிக்கு விவசாயிகள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். எனவே இந்த ஆண்டு குறித்த நேரத்தில் குறுவை சாகுபடி நடைபெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முன்னதாகவே பெய்த பருவமழையால், மே மாதத்தில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. அணையில் போதிய அளவு நீர் இருப்பு காரணமாக கடந்த ஆண்டு வழக்கமாக தண்ணீர் திறக்கப்படும் ஜூன் மாதம் 12-ந் தேதிக்கு முன்னதாக மே மாதம் 24-ந் தேதியே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்டா பாசனத்திற்கு அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.

முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார்

இந்த நிலையில் நடப்பாண்டில் ஜூன் மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைக்கிறார். முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு பொதுப்பணித்துறையினர் மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பதற்கான ஆயத்த பணிகளை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்