ராதாபுரம் பகுதி பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு
தோவாளை கால்வாயில் இருந்து ராதாபுரம் பகுதி பாசனத்துக்காக தமிழக சபாநாயகர் அப்பாவு தண்ணீர் திறந்து விட்டார்.
நாகர்கோவில்:
தோவாளை கால்வாயில் இருந்து ராதாபுரம் பகுதி பாசனத்துக்காக தமிழக சபாநாயகர் அப்பாவு தண்ணீர் திறந்து விட்டார்.
தண்ணீர் திறப்பு
குமரி மாவட்ட பொதுப்பணித்துறையின் (நீர்வள ஆதார அமைப்பு) கீழ் தோவாளை கால்வாயில் இருந்து நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதிக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் அழகப்பபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட நிலப்பாறை - திருமூலநகர் கால்வாயில் இருந்து தமிழக சட்டசபைத் தலைவர் அப்பாவு தண்ணீர் திறந்துவிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் பாசன வசதி பெறும் வகையில் தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பேச்சிப்பாறை அணையில் இருந்து தோவாளை கால்வாய் வழியாக வரும் தண்ணீரை நிலப்பாறை - திருமூலர் பகுதியில் இருந்து விவசாயிகளின் பாசனத்திற்கு திறந்து விடப்படுகிறது.
நிறைவேற்றித்தர வேண்டும்
இந்த திட்டம் தயாரிக்கும்போது 17 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால் பல சவால்களை கடந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்பு தான் 150 கன அடி தண்ணீர் இந்த இடத்தில் திறந்து விடப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே 42 அடியாக இருந்த பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 48 அடியாக உயர்த்தப்பட்டு அந்த 6 அடி நீரும் ராதாபுரம் கால்வாய் பாசன வசதிக்காக உருவாக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 6 அடி உயர்த்தப்பட்டுள்ளதால் 3.75 டி.எம்.சி. தண்ணீர் கூடுதலாக கொள்ளளவு கொண்டுள்ளது.
இந்த தண்ணீரில் 0.75 டி.எம்.சி. மட்டும் தான் ராதாபுரம் பகுதியில் எடுக்கப்படுகிறது. இந்த கால்வாயில் இருந்து நேரடி பாசனத்திற்கு தண்ணீர் கொடுப்பதில்லை. எனவே, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மற்றும் பொறியாளர்கள் குளங்களை அடிக்கடி கண்காணித்து தண்ணீர் நிரப்பி தர வேண்டுமென்பது அந்த பகுதி விவசாயிகளின் கோரிக்கை. அதனை துறை அதிகாரிகள் நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு சபாநாயகர் அப்பாவு கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) செயற்பொறியாளர் வசந்தி, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) அவ்வை மீனாட்சி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வாணி, துணை இயக்குனர் (தோட்டக்கலைத்துறை) ஷீலா ஜாண், உதவி செயற்பொறியாளர்கள் கிங்ஸ்லி, எட்வின் ஜெயராஜ், உதவி பொறியாளர்கள் கதிரவன், வில்சன் போஸ், திருமூலநகர் பங்குதந்தை பீட்டர் பாஸ்டியன், அழகப்பபுரம் பேரூராட்சி துணைதலைவர் அண்ட்ரூஸ் மணி, பஞ்சாயத்து உறுப்பினர்கள் துரைஅரசு, நடசேன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.