11 ஆண்டுகளுக்கு பின் கோவில் திறப்பு
திருமங்கலம் அருகே 11 ஆண்டுகளுக்கு பின் கோவில் திறக்கப்பட்டது. அதிகாரிகள் முன்னிலையில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடந்தது.
திருமங்கலம்,
திருமங்கலம் அருகே 11 ஆண்டுகளுக்கு பின் கோவில் திறக்கப்பட்டது. அதிகாரிகள் முன்னிலையில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடந்தது.
கோவில் மூடப்பட்டது
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நேசனேரி கிராமத்தில் பழமை வாய்ந்த அங்காள ஈஸ்வரி வாலகுருநாதன் கோவில் உள்ளது. இதில் வழிபாட்டு முறையில் பிரச்சினை எழுந்ததால் இரு சமுதாயத்தினர் மோதலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை மூலம் கடந்த 2012-ம் ஆண்டு கோவில் பூட்டப்பட்டது.
தொடர்ந்து பலமுறை சமாதான கூட்டம் நடத்தி ஒவ்வொரு முறையும் கோவிலை திறக்க முற்படும்போது பிரச்சினை எழுந்து வந்ததால் கோவில் நிரந்தரமாக பூட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
11 ஆண்டுக்கு பிறகு கோவில் திறப்பு
இந்த நிலையில் அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து 11 ஆண்டுக்கு பிறகு கோவிலை திறப்பதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. கோவிலை திறக்கும் சூழல் ஏற்பட்டதால் கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை உருவானது.
இந்நிலையில் நேற்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வி தலைமையில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவில் சுத்தம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திருமங்கலம் கோவில் செயல் அலுவலர்கள் சங்கரேஸ்வரி, சர்க்கரை அம்மாள், அங்கயற்கண்ணி கோவில் திறக்கப்படுவதை ஒரு சமுதாயத்தினர் ஏற்றுக்கொண்ட நிலையில் மற்றொரு சமுதாயத்தினர் உடன்படாததால் கிராமத்தில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு கோவில் திறக்கப்பட்டு வழிபாடு நடைபெறுவது தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி இருப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.