கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு

Update: 2023-06-12 19:30 GMT

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவ மாணவிகள் வழக்கமான உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்.

பள்ளிகள் திறப்பு

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை சார்பில் முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து பொதுமக்கள் வெளியே நடமாட முடியாத நிலை உருவானது. இதனைத் தொடர்ந்து 2 முறை பள்ளிகள் திறக்கப்படும் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

தொடர்ந்து 6-ம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு ஜூன் 12-ம் தேதியும், ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ஜூன் 14-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இந்த நிலையில் அரசு அறிவித்தபடி கோடை விடுமுறைக்கு பின் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது.

643 பள்ளிகள் திறப்பு

அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் 322 நடுநிலைப்பள்ளிகள், 225 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள், 96 தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 643 பள்ளிகள் நேற்று கோடை விடுமுறைக்கு பின் திறக்கப்பட்டது. காலை 8 மணி முதல் அந்தந்த பள்ளிகளுக்கு மாணவ - மாணவிகள் வழக்கமான உற்சாகத்துடன் வந்தனர். அவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய- ஆசிரியைகள் பூக்கள் கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து அந்தந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்றது. தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியை கலைச்செல்வி மற்றும் ஆசிரியைகள் பூக்கள் கொடுத்து வரவேற்றனர்.

சுமார் ஒன்றரை மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் வகுப்பறைகளுக்கு வந்த மாணவ- மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் மாணவர்கள் மற்றும் தோழிகளுடன் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். தொடர்ந்து அந்தந்த பள்ளிகளில் இறை வணக்க கூட்டம் நடைபெற்றது. அப்போது பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவ மாணவிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார். தொடர்ந்து வகுப்புகள் நடைபெற்றது. பள்ளி திறந்த முதல் நாள் என்பதால் ஆசிரியர்கள் பாடங்கள் எதுவும் நடத்தவில்லை. ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொள்ளும் நிகழ்ச்சி மட்டுமே நடந்தது.

மேலும் செய்திகள்