உற்சாகத்துடன் வந்த மாணவ-மாணவிகள்

கோடைவிடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் மாணவ மாணவிகள் அதிக உற்சாகத்துடன் தங்களின் கல்வியை தொடர வந்தனர்.

Update: 2023-06-12 18:45 GMT

கோடைவிடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் மாணவ மாணவிகள் அதிக உற்சாகத்துடன் தங்களின் கல்வியை தொடர வந்தனர்.

பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டிற்கான தேர்வுகள் ஏப்ரல் மாத இறுதியில் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறைக்கு பின்னர் ஜூன் 1-ந் தேதி 6 முதல் 12-ம் வகுப்புக்கும், ஜூன் 5-ந் தேதி 1 முதல் 5-ம் வகுப்புக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வழக்கத்திற்கு மாறாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் சுட்டெரித்து அதிக வெப்பச்சலனம் நிலவியது. இதனால் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

இதையடுத்து 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புகளுக்கு ஜூன் 14-ந் தேதியும், 6 முதல் 12-ம் வகுப்பிற்கு ஜூன் 12-ந் தேதியும் திறக்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி கோடை விடுமுறைக்கு பின்னர் நேற்று தமிழகம் முழுவதும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

மாணவ, மாணவிகள் உற்சாகம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை திறக்கப்பட்டன. மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 1,527 பள்ளிகள் உள்ளன. இதில் 1,020 பள்ளிகள் தொடக்கப் பள்ளிகளாக உள்ளன. இந்த பள்ளிகள் வரும் 14-ந் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் மீதம் உள்ள 507 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.

கோடை விடுமுறை ஓய்வுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து மாணவ, மாணவிகள் அனைவரும் உற்சாகத்துடன் புதிய சீருடைகள் அணிந்து பள்ளிக்கு வந்தனர். விடுமுறைக்கு பின்னர் தங்களின் நண்பர்கள், தோழிகளை கண்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

தங்களின் கோடை விடுமுறையை எவ்வாறு பயன் உள்ள வகையில் கழித்தோம் என்று பேசிக்கொண்டனர். பள்ளிகளுக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு அரசின் உத்தரவின்படி முதல்நாளே அரசின் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன. ேமலும் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் இனிப்பு கொடுத்து வரவேற்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்