கடனாநதி, ராமநதி அணைகள் திறப்பு

கார் சாகுபடிக்காக கடனாநதி, ராமநதி அணைகள் திறப்பு

Update: 2022-07-25 15:11 GMT

கடையம்:

தென்காசி மாவட்டத்தின் பிரதான அணைகளான கடனாநதி மற்றும் ராமநதி அணைகள் மூலம் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது கார் சாகுபடி பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அணைகளில் இருந்து நேற்று மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தண்ணீர் திறந்து விட்டார். இதன் மூலம் கடனாநதி அணை பாசனத்திற்கு உட்பட்ட அரசபத்து, வடகுறுவப்பத்து, ஆழ்வார்குறிச்சி தென்கால், ஆம்பூர் பெருங்கால், மஞ்சம்புளிகால், காக்கநல்லூர்கால், காங்கேயன்கால் ஆகிய கால்வாய் பாசனத்திற்கு உட்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

இதேபோல் ராமநதி அணை பாசனத்திற்கு உட்பட்ட வடகால், தென்கால் மற்றும் பாப்பான்கால் ஆகிய கால்வாய் நேரடி பாசனத்தில் கடையம், மேலக்கடையம், கோவிந்தப்பேரி, ஆழ்வார்குறிச்சி, வாகைக்குளம், இடைகால், பொட்டல்புதூர், துப்பாக்குடி, அயன்பொட்டல்புதூர், பாப்பான்குளம், ரவணசமுத்திரம் ஆகிய கிராமங்களுக்கு உட்பட்ட 1008.19 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறும்.

நேற்று முதல் வருகிற நவம்பர் மாதம் 11 -ந்தேதி வரை 110 நாட்களுக்கு கடனாநதி அணையில் இருந்து நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 125 கனஅடி வீதம் 664.60 கனஅடிக்கு மிகாமலும், ராமநதி அணையில் இருந்து நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 60 கனஅடிக்கு மிகாமலும் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து, தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விடப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் தமிழக சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்கள் டி.ஆர்.பி.ராஜா, ஆளூர் ஷானவாஸ், சதன் திருமலைக்குமார், ராஜ்குமார் மற்றும் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்