பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வைகுண்ட ஏகாதசி
மயிலாடுதுறை திருவிழந்தூரில் அமைந்துள்ள பரிமள ரங்கநாதர் கோவில், பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க கோவில்களில் 5-வது கோவிலாகும். இது திருமங்கையாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களால் பாடல் பெற்ற பழமை வாய்ந்த கோவில் ஆகும்.
இந்த கோவிலில் மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை 11-ம் நாளன்று வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு விழா நேற்று நடந்தது.
சொர்க்க வாசல் திறப்பு
ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும் இந்த விழா பகல் பத்து, ராப்பத்து என 21 நாட்கள் நடைபெறும். கடந்த (டிசம்பர்) மாதம் 22-ந் தேதி தொடங்கிய விழாவில் நாள்தோறும் பரிமள ரங்கநாத பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் திறப்பு நேற்று அதிகாலை நடந்தது. இதனையொட்டி பெருமாள் தங்க ரத்தின அங்கியில் எழுந்தருளினார்.
தொடர்ந்து சிறப்பு ஆராதனைகளுக்குப்பின் அதிகாலை 5.22 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டு, பெருமாள் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு 'பரிமளரெங்கா, கோவிந்தா' என்ற பக்தி முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
சீர்காழி
சீர்காழி கொள்ளிடம் முக்கூட்டில் உள்ள தாடாளன் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக பெருமாளுக்கு அதிகாலை சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை நடந்தது. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் ரத்தின அங்கி அலங்காரத்தில் கோவில் வசந்த மண்டபத்தில் எழுந்தருள சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.
சிறப்பு பூஜை
தொடர்ந்து மேள, தாளங்கள் முழங்க ஸ்ரீதேவி, பூதேவியுடன் தாடாளன்பெருமாள் சொர்க்கவாகல் அருகே எழுந்தருளினார். பின்னர் சொர்க்கவாசலுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அவ்வழியே பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பெருமாளின் வலது திருவடியை நேற்று மட்டுமே வணங்க முடியும் என்பதால் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.