அரசு இ-சேவை மையம் திறப்பு
கொடைக்கானல் அப்சர்வேட்டரியில் அரசு இ-சேவை மையம் திறக்கப்பட்டது.
கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அத்துடன் மேல்மலை கிராமங்களில் இருந்து வரும் பொதுமக்களுக்கு நுழைவு வாயிலாக அப்சர்வேட்டரி உள்ளது. இதனால் அப்பகுதியில் அரசு இ-சேவை மையம் அமைக்க வேண்டும் என்று பழனி எம்.எல்.ஏ. இ.பெ.செந்தில்குமாரிடம் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் கொடைக்கானல் அப்சர்வேட்டரியில் அரசு பொது இ-சேவை மையம் அமைக்க எம்.எல்.ஏ. நடவடிக்கை எடுத்தார். அதன்படி, அப்சர்வேட்டரியில் அரசு இ-சேவை மையம் அமைக்கப்பட்டது. இதற்கான திறப்பு விழாவில் கொடைக்கானல் நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு இ-சேவை மையத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினர்.
இந்த விழாவில் நகராட்சி முன்னாள் தலைவர் முகமது இப்ராகிம், நகராட்சி கவுன்சிலர்கள் கலாவதி தங்கராஜ், ஜோதிமணி, முன்னாள் கவுன்சிலர் இளங்கோவன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த மையத்தின் மூலம் பொதுமக்களுக்கு வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், மாணவர்களுக்க முதல் பட்டதாரி சான்றிதழ், பட்டா பெயர் மாற்றம் உள்பட பல்வேறு சேவைகள் செய்து தரப்படும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.