பாபநாசத்தில், ஆளில்லா கடை திறப்பு

பாபநாசத்தில், ஆளில்லா கடை திறப்பு

Update: 2022-10-02 20:13 GMT

அனைவரும் வாழ்வில் நேர்மையை கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக பாபநாசத்தில் ஆளில்லா கடை திறந்து வைக்கப்பட்டது. கடந்த 23 ஆண்டுகளாக காந்தி பிறந்த நாள் அன்று மட்டும் இந்த கடை செயல்படுகிறது.

ஆளில்லா கடை

தஞ்சை மாவட்டம் பாபநாசம் பஸ் நிறுத்தத்தில், மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு ரோட்டரி சங்கம் சார்பில் நேற்று ஆளில்லா கடை திறக்கப்பட்டது. இந்த கடையில் வீட்டு உபயோகப் பொருட்கள், எழுது பொருட்கள், திண்பண்டங்கள் ஆகியவை வைக்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு பொருட்களின் மேலும் அதன் விலை அச்சிடப்பட்டு இருந்தது. பொருட்களின் அருகே ஒரு டப்பா வைக்கப்பட்டு இருந்தது.

இந்த கடைக்கு வருபவர்கள் தங்களுக்கு தேவையான பொருளை எடுத்துக்கொண்டு அதற்குரிய தொகையை அங்கு வைக்கப்பட்டு இருந்த டப்பாவில் போட்டு விட்டு சரியான சில்லறையை எடுத்து சென்றனர்.

ஆளில்லா கடை திறப்பு நிகழ்ச்சியில் பாபநாசம் ரோட்டரி சங்க தலைவர் அறிவழகன், செயலாளர் சிலம்பரசன், மாவட்ட கவர்னர் செங்குட்டுவன், பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பிரபாகரன், ஜெயக்குமார், மணிகண்டன், ராஜேந்திரன், ஜெயசேகர், காதர் பாட்ஷா, சரவணன், செந்தில்நாதன், விவேகானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காந்தி கனவை நனவாக்க...

இதுகுறித்து ரோட்டரி சங்க தலைவர் அறிவழகன் கூறும்போது, மகாத்மா காந்தி நேர்மை, நாணயம், உண்மை, நம்பிக்கை நிறைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று கனவு கண்டார். அவர் கண்ட கனவினை நனவாக்கிட எங்களது அமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் காந்தி பிறந்த நாளில் அனைவரும் வாழ்வில் நேர்மையை கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை உருவாக்கிடும் வகையில் இந்த ஆளில்லா கடையை திறந்து நடத்தி வருகிறோம்.

பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்களது வாழ்வில் நேர்மையை கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த ஆளில்லா கடை ஒரு நாள் மட்டும் திறக்கப்படுகிறது. இதில் விற்பனையாகும் தொகை சேவை திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்