அனைத்து மகளிர் காவல் நிலையம் திறப்பு
அனைத்து மகளிர் காவல் நிலையம் திறக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் அனைத்து மகளிர் காவல் நிலையம் தொடங்கப்பட்டது. இதனை காணொலி காட்சி மூலம் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்து வைத்தார். விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல் காரையூர் உள்ளிட்ட 4 போலீஸ் நிலையம் இலுப்பூர் சப்-டிவிசன்களுக்கு உட்பட்டது. இந்த அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே குத்து விளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், இப்பகுதியில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக தமிழக அரசு இந்த பகுதியில் புதிதாக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை தொடங்கியுள்ளது. ஆகையால் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறினார். இதில் இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு காயத்திரி, இன்ஸ்பெக்டர்கள் (இலுப்பூர்) ஹேமலதா, (அன்னவாசல்) ராதாகிருஷ்ணன், (விராலிமலை) கதிரவன் மற்றும் போலீசார், பொதுமக்கள், அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், மகளிர் குழுவினர் கலந்து கொண்டனர்.