திருநங்கைகளுக்கு தனி சிகிச்சை மையம் திறப்பு
திருநங்கைகளுக்கு தனி சிகிச்சை மையம் திறப்பு
கோவை
கோவை அரசு ஆஸ்பத்திரியில் திருநங்கைகளுக்கான தனி சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. இதனை அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தனி மருத்துவ மையம்
கோவை அரசு ஆஸ்பத்திரியில் திருநங்கைகளுக்கு தனி சிகிச்சை மையத்தை நேற்று டீன் நிர்மலா திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருநங்கைகள் கலந்துகொண்டனர்.இந்த சிகிச்சை மையம் குறித்து டீன் நிர்மலா கூறியதாவது:-
இது ஒரு பன்னோக்கு சிகிச்சை மையம் ஆகும். மருத்துவமையத்தில் வாரத்தில் புதன்கிழமை தோறும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மூன்றாம் பாலினத்தவருக்கான வெளிநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கு என தனி சிறப்பு டாக்டர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தோல்நோய், பிளாஸ்டிக் சர்ஜரி, சிறுநீரக அறுவை சிகிச்சை, மனநோய், மகப்பேறு மற்றும் காது, மூக்கு, தொண்டை டாக்டர்கள் கொண்ட சிறப்பு குழுவினர் ஒரே இடத்தில் சிகிச்சை அளிக்க உள்ளனர்.
ஒரே இடத்தில் சிகிச்சை
இதுவரை மூன்றாம் பாலினத்தவர்கள் வெவ்வேறு சிகிச்சைப் பிரிவிற்கு சென்று ஆலோசனை பெற வேண்டி இருந்தது. ஆனால் தற்போது அவர்களுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு பன்நோக்கு சிகிச்சை மையம் அவர்களின் மருத்துவ தேவையை ஒரே இடத்தில் பூர்த்தி செய்ய ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது அவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும். இந்த சிகிச்சை தமிழக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் கீழும் மற்றும் இந்திய அரசின் தேசிய சுகாதார திட்டத்தின் கீழும் செயல்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.