ஆக்கி போட்டி தொடக்க விழா:கலெக்டர் செந்தில்ராஜ் பங்கேற்பு

தூத்துக்குடியில் ஆக்கி போட்டியை கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.

Update: 2023-08-29 18:45 GMT

தூத்துக்குடியில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு நடந்த ஆக்கி போட்டியை கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.

ஆக்கி போட்டி

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் பிரேவ் வாரியர்ஸ் ஆக்கி கிளப் ஆகியவை இணைந்து எம்.டி.சி. கோப்பைக்கான போட்டியை நடத்தின. இந்த போட்டி தொடக்க விழா நேற்று காலையில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது, மேஜர் தயான் சந்த் இந்திய அளவில் மட்டுமல்லாமல், உலகளவில் புகழ் பெற்ற ஆக்கி வீரர். அவருக்கு அசாத்தியமான திறமைகள் இருந்தது. மேஜர் தயான்சந்த் கால்களில் ஷூ அணியாமல் வெறும் காலில் விளையாடுவார். இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லர், ஜெர்மானியர்கள் தான் அதிக திறமைசாலிகள் என்று நினைத்தார். அப்போது மேஜர் தயான்சந்த் ஜெர்மனிக்கு சென்று ஹிட்லர் கண் முன்னே ஜெர்மனி அணியை வீழ்த்தினார். மேஜர் தயான் சந்த் பெயரில் தான் விளையாட்டு துறையில் வழங்கக்கூடிய உயரிய விருதான கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது. மேலும், அவர் பிறந்தநாளான ஆகஸ்டு 29-ந் தேதி தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடி வருகிறோம்.

முயற்சி

தமிழக அரசு முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தி சிறந்த ஆளுமைகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆக்கிபோட்டியில் தூத்துக்குடி, கோவில்பட்டி அணிகள் சிறப்பாக விளையாடுகிறார்கள். அடுத்த ஆண்டு நடைபெறும் முதல்-அமைச்சர் கோப்பைக்கான ஆக்கி போட்டியில் தூத்துக்குடிமாவட்டம் முதலிடம் பெற வேண்டும். சிலருக்கு படிப்பில் ஆர்வம் இருக்கும், சிலருக்கு விளையாட்டில் ஆர்வம் இருக்கும். எதில் ஆர்வம் இருக்கிறதோ அதனை தேர்வு செய்து அதில் தொடர்ந்து பயிற்சி பெற வேண்டும். தங்களது ஆர்வத்தை நோக்கி தொடர்ந்து பயணம் செய்யவேண்டும். முயற்சி செய்தால் அனைவருக்கும் வெற்றி உண்டு என்று கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

பின்னர் இளம் ஆக்கி வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் விதமாக ஆக்கி மட்டை மற்றும் காலனிகளை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்