சுகாதார நிலைய கூடுதல் கட்டிட திறப்பு விழா
சேவினிபட்டி ஊராட்சியில் சுகாதார நிலைய கூடுதல் கட்டிட திறப்பு விழாவில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி, கார்த்தி சிதம்பரம் எம்.பி. பங்கேற்றனர்.
திருப்பத்தூர்,
சேவினிபட்டி ஊராட்சியில் சுகாதார நிலைய கூடுதல் கட்டிட திறப்பு விழாவில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி, கார்த்தி சிதம்பரம் எம்.பி. பங்கேற்றனர்.
திறப்பு விழா
திருப்பத்தூர் அருகே சேவினிபட்டி ஊராட்சியில் டாடா குழுமத்தின் சமூக பொறுப்பு நிதி ரூ.20 லட்சம் மதிப்பீட்டின் கீழ் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தையும், மருத்துவ உபகரணங்களையும் பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் விழா நடைபெற்றது. விழாவி்ற்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கார்த்தி சிதம்பரம் எம்.பி. புதிய கட்டிடத்தை திறந்து வைத்தும், பொதுமக்களுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கியும் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், டாடா குழுமத்தி்ன் சமூக பாதுகாப்பு நிதி திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்திற்கு ரூ.1 கோடியே 23.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சேவினிபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகள் பரிசோதனைக்கான கூடுதல் கட்டிடம் ரூ.20 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. மேலும் ரூ.63.5 லட்சம் அளவிலான மருத்துவ உபகரணங்கள், ஸ்கேனிங் மிசின், ஈ.சி.சி.மிசின், அறுவை சிகிச்சைக்கான உபகரணங்கள் 12 ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படுகிறது.
மருந்து பெட்டகம்
திருப்புவனம் வட்டாரம் கொந்தகை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.12 லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டிடமும், இடையமேலூரில் ரூ.25 லட்சம் செலவில் செவிலியர் குடியிருப்பு கட்டிடங்களும், தேவகோட்டையில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் செலவில் நோயாளிகள் காத்திருப்பு அறைகள் வசதி செய்யப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து மகளிர் நல மருத்துவ முகாமில் கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு மருந்து பெட்டகங்களும், சித்தா பிரிவின் மூலம் வழங்கபட்ட மகப்பேறு சஞ்சீவி பெட்டகத்தினையும் வழங்கினார். விழாவில் காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி, சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராம்கணேஷ், ஒன்றியக்குழு உறுப்பினர் கலைமாமணி, ஊராட்சி தலைவர் சேவற்கொடியோன், வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார், திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்புராம், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, பொருளாளர் எஸ்.எம்.பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.