இந்திய கால்பந்து அணியில் இடம் பிடித்து ஊட்டி வீரர் சாதனை
இந்திய கால்பந்து அணியில் ஊட்டியை சேர்ந்த கால்பந்து வீரர் சாம் வில்சன் இடம் பிடித்து சாதனை படைத்தார்.
கோவை:
இந்திய கால்பந்து கூட்டமைப்பு, நேபாள கால்பந்து சங்கம், தெற்காசிய கால்பந்து சங்கம் ஆகியவை சார்பில் இந்தியா-நேபாளம் இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது. இதற்கான இந்திய கால்பந்து அணியில் ஊட்டியை சேர்ந்த கால்பந்து வீரர் சாம் வில்சன் இடம் பிடித்து சாதனை படைத்தார்.
இதுகுறித்து கால்பந்து வீரர் சாம் வில்சன் கூறும்போது:-
இந்திய அணிக்கான முதற்கட்ட தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குஜராத் மாநிலத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, வடகிழக்கு மாநிலங்கள் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான கால்பந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் கடும் போட்டியை எதிர்கொண்டு வெற்றி பெற்றேன்.
பின்னர் கடந்த மே மாதம் 2-ம் கட்ட தேர்வு நடைபெற்றது. இதில் நான் சிறப்பாக விளையாடியதால் இந்திய கால்பந்து அணிக்கு தேர்வு செய்யப்பட்டேன். இதற்காக நான் கடும் பயிற்சிகள் மேற்கொண்டேன் என்று அவர் கூறினார். சாதனை படைத்த வீரரை சக வீரர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.