ஊட்டுவாழ்மடம் ரெயில்வே கேட் நாளை வரை மூடப்படுகிறது
சுரங்கப்பாதை பணிக்காக ஊட்டுவாழ்மடம் ரெயில்வே கேட் நாளை (புதன்கிழமை) வரை மூடப்படுகிறது.
நாகர்கோவில்:
சுரங்கப்பாதை பணிக்காக ஊட்டுவாழ்மடம் ரெயில்வே கேட் நாளை (புதன்கிழமை) வரை மூடப்படுகிறது.
சுரங்கப்பாதை
நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு பின்புறம் ஊட்டுவாழ்மடம், கருப்புக் கோட்டை, இலுப்பையடி போன்ற கிராமங்கள் உள்ளன. இங்கு 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் ஊட்டுவாழ்மடம் அருகே உள்ள ரெயில்வே கேட்டை கடந்து தான், நாகர்கோவில் வர வேண்டும். ரெயில் நிலையம் அருகில் இருப்பதால், ரெயில் என்ஜின்கள் மாற்றும் போது கூட ரெயில்வே கேட் மூடப்பட்டு இருக்கும். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 13 மணி நேரம் இந்த ரெயில்வே கேட் பூட்டியே இருக்கும்.
இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி ஊட்டுவாழ்மடம் ரெயில்வே கேட்டில் ரூ.4.50 கோடியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் கடந்த மாதம் தொடங்கியது.
பொதுமக்கள் எதிர்ப்பு
முதலில் சுரங்கப்பாதை பணிக்காக ரெயில்வே கேட் 4 மாதங்கள் வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தொிவித்தனர். ரெயில்வே கேட்டை மூடினால் 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் பொதுமக்கள் எதிர்த்தனர். எனவே ஊட்டுவாழ்மடம் ரெயில்வே கேட் அருகிலேயே தற்காலிக பாதை அமைத்து ரெயில்வே கேட் வசதியும் ஏற்படுத்தப்பட்டது. அந்த தற்காலிக பாதை வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நிலையில் சுரங்கம் அமைப்பதற்கு நிலத்தை தோண்டும் பணி நடக்கிறது. சுரங்கப்பாதை அமைய உள்ள இடத்தில் 4 ரெயில் தண்டவாளங்கள் உள்ளன. அந்த தண்டவாளங்களின் கீழ் கர்டர் என்று சொல்லப்படும் பாலம் அமைத்து விட்டதால் தண்டவாளத்துக்கு கீழ் நிலத்தை தோண்டுவது சுலபமாக இருக்கும். ரெயில் போக்குவரத்திலும் பாதிப்பு இருக்காது. அவ்வாறு கர்டர் பாலம் அமைக்கவில்லை எனில் தண்டவாளத்துக்கு கீழ் நிலத்தை தோண்ட முடியாது. எனவே தான் கர்டர் பாலம் அமைக்கப்படுகிறது. ஏற்கனவே 3 தண்டவாளங்களுக்கு கர்டர் பாலம் அமைக்கப்பட்டு நிலம் தோண்டப்பட்டு விட்டது.
3 நாட்கள் மூடல்
இந்த நிலையில் 4-வது தண்டவாளத்துக்கு கீழ் நிலத்தை தோண்டும் பணிக்காக கர்டர் பாலம் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. 5 ராட்சத எந்திரங்கள் மூலமாக இந்த பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. இந்த பணிகளுக்காக நேற்று ரெயில்வே கேட் மூடப்பட்டது. தொடர்ந்து நாளை (புதன்கிழமை) மாலை 5 மணி வரை 3 நாட்கள் ரெயில்வே கேட் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிப்பு பேனர் அங்கு வைக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ஊட்டுவாழ்மடம் மக்கள் தங்களது வாகனங்களை ரெயில்வே கேட்டுக்கு அருகே நிறுத்திவிட்டு தங்களது வீடுகளுக்கு சென்று வருகிறார்கள். ஒரு சிலர் சுமார் 4 கிலோ மீட்டர் சுற்றி ஆனைபாலம் வழியாக சென்று வருகிறார்கள்.