விற்பனை குறைந்த டாஸ்மாக் கடைகள் மட்டும் மூடப்பட்டு உள்ளன
நாமக்கல்லில் விற்பனை குறைந்த டாஸ்மாக் கடைகள் மட்டும் மூடப்பட்டு உள்ளன என முன்னாள் அமைச்சர் தங்கமணி பேட்டியில் கூறி உள்ளார்.
நாமக்கல் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்தலின் ஊரக பகுதிக்கு நேற்று மாவட்ட ஊராட்சிக்குழு தேர்தல் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் 8 பேரும், தி.மு.க. சார்பில் 8 பேரும் போட்டியிட்டனர். இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த செந்தில், கனகா, சுகிர்தா, செல்லப்பன், இன்பதமிழரசி, தவமணி, ருத்ரா தேவி, பா.ம.க.வை சேர்ந்த வடிவேலன் ஆகிய 8 பேர் வெற்றிப்பெற்றனர்.
மொத்தம் 17 உறுப்பினர்களில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சாரதா அ.தி.மு.க.வை சேர்ந்தவர் என்பதால் அ.தி.மு.க. அணி சார்பில் போட்டியிட்டவர்களுக்கு தலா 9 வாக்குகளும், தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர்களுக்கு 8 வாக்குகளும் கிடைத்தன.
வெற்றிப்பெற்ற அனைவருக்கும் தேர்தல் நடத்தும் அலுவலரான கூட்டுறவு சங்கங்களின் இணைப்பு பதிவாளர் செல்வகுமரன் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் வெற்றி பெற்ற திட்டக்குழு உறுப்பினர்கள், அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் டாக்டர் சரோஜா மற்றும் சேகர் எம்.எல்.ஏ.விடம் வாழ்த்து பெற்றனர்.
இதையடுத்து முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குரல் கொடுத்ததன் எதிரொலியாக 500 டாஸ்மாக் கடைகள் மூட தமிழக அரசு முன் வந்ததாகவும், ஆனால் கோவில்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடாமல், விற்பனை குறைந்த டாஸ்மாக் கடைகள் மட்டும் மூடப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் மக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட தொடர்ந்து சட்டமன்றத்தில் குரல் கொடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.