அரசு நிர்ணயித்தபடி கலவை உரங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும்

அரசு நிர்ணயித்தபடி கலவை உரங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று உர உற்பத்தியாளர்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை கூறினார்.

Update: 2023-01-03 18:45 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண்மைத்துறை சார்பில் கலவை உர உற்பத்திக்கு தேவையான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

கலவை உர உற்பத்தி நிறுவனங்களுக்கு கலவை உரம் உற்பத்தி செய்ய நிறுவனங்கள் கோரும் ரசாயன மூலப்பொருட்களின் தேவைப்பட்டியலில் 10 சதவீத அளவு மத்திய அரசு மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை தேவையான யூரியா- 516 மெ.டன், டிஏபி- 73 மெ.டன், எம்.ஏ.பி- 109 மெ.டன், பொட்டாஷ்- 325 மெ.டன், சூப்பர் பாஸ்பேட்- 76 மெ.டன் ஆக மொத்தம் 1,099 மெ.டன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்

ரசாயன உர மூலப்பொருட்களை கொண்டு கலவை உரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட வேண்டும். கலவை உர உற்பத்தி நிறுவனங்களுக்கு தேவையான உரங்களை வாங்குவதற்கு மத்திய அரசின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். கலவை உரங்கள் உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்கள் வாங்குவதற்கு உரிய அனுமதி பெற்றவர்கள் மூலம் மட்டுமே ரசாயன உரங்கள் கொள்முதல் செய்ய வேண்டும். கலப்பு உரங்கள் தயாரிக்கும்போது, குவியல் வாரியாக உர மாதிரிகள் எடுத்து ஆய்வகங்களில் முறையான தரப்பரிசோதனை மேற்கொண்டு தரம் உறுதி செய்யப்பட்ட பிறகே விற்பனைக்கு அனுப்ப வேண்டும்.

நிறுவனங்கள், தங்களால் உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து கலவை உர மூட்டைகளிலும் பேட்ச் எண், உற்பத்தி தேதி, அதிகபட்ச சில்லரை விற்பனை விலை கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும். உற்பத்தி பதிவேடு, மூலப்பொருட்கள் கொள்முதல் பதிவேடு, விற்பனை பட்டியல், தரப்பரிசோதனை பதிவேடு ஆகியவற்றை முறையாக பராமரிக்க வேண்டும். உர உற்பத்தி நிறுவனங்கள் தங்களுடைய உரிமத்தில் இணைப்பு மேற்கொள்ளப்பட்ட சில்லரை உர விற்பனை கடைகளில் மட்டுமே மூலப்பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும். அனைத்து கலவை உர தயாரிப்பு நிறுவனங்களும் மாதாந்திர அறிக்கையை வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்திற்கு ஒவ்வொரு மாதமும் 25-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும். ஆய்வக முடிவுகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.

அரசு நிர்ணயித்தபடி தயாரிக்க

மேலும் கொள்முதல் செய்யப்பட்ட மூலப்பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். கலவை உர உற்பத்தி செய்யும் நிறுவனங்களை வேளாண்துறை அலுவலர்கள் தேவைப்படும்போது ஆய்வு செய்யவோ அதனடிப்படையில் உரிமங்களை ரத்து செய்யவோ அல்லது மாற்றியமைக்கவோ உரிமை உள்ளது. எனவே கலவை உர உற்பத்தியாளர்கள் அரசு நிர்ணயித்தபடி கலவை உரங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும். விவசாயிகளுக்கும், வேளாண்த்துறை வளர்ச்சிக்கும் தங்களின் பணிகள் மூலம் சிறப்பான பங்களிப்பை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி, உதவி இயக்குனர் (தரக்கட்டுபாடு) ஜெயசந்தர் மற்றும் உர உற்பத்தி நிறுவன உரிமையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்