கழிவுநீர் அகற்றும் சேவைகளுக்கு உரிமம் பெற்ற வாகனங்களை மட்டுமே பயன்படுத்த அறிவுறுத்தல்

கழிவுநீர் அகற்றும் சேவைகளுக்கு உரிமம் பெற்ற வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரி அறிவுறுத்தினார்.

Update: 2023-05-27 21:40 GMT

கலந்தாய்வு கூட்டம்

கழிவுநீர் தொட்டிகள் மற்றும் பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யும்போது ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம், திருச்சி மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமை தாங்கினார்.கூட்டத்தில் நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் ப.பொன்னையா, பேரூராட்சிகளின் இயக்குனர் கிரண் குர்ராலா, தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரிய மேலாண்மை இயக்குனர் வி.தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் மற்றும் காணொலி காட்சி மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பேசியதாவது:-

உயிரிழப்புகளை தடுக்க வேண்டும்

மனித கழிவுகளை மனிதனே அகற்றும் பணியாளர்கள் தடைச்சட்டம் மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டம்-2013-ஐ கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் பணியாளர்களை கழிவுநீர் தொட்டிகளில் சுத்தம் செய்யும் பணியில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி ஈடுபடுத்தி, அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் முற்றிலுமாக தடுக்க வேண்டும். கழிவுநீர் வாகனங்களில் கழிவுநீர் அகற்றும் சேவைக்கான தேசிய உதவி சேவை எண் 14420-ஐ நன்கு விளம்பரப்படுத்த வேண்டும். கழிவுநீர் அகற்றும் சேவைகளுக்கு உரிமம் பெற்ற வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.உரிமம் பெறப்படாத கழிவு நீர் வாகனங்களை 30 நாட்களுக்குள் உரிமம் பெற எச்சரிக்கை கடிதம் அனுப்ப வேண்டும். கழிவுநீர் தொட்டிக்குள் நுழைவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பொதுமக்களிடையே தீவிரமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் சேவை வேண்டுவோர் உரிமம் பெற்ற கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் மூலம் மட்டுமே கழிவுநீர் அகற்றப்பட்டது என்பதற்கான உறுதிமொழியை வழங்க வேண்டும். இதனை அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆணையாளர்கள் கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்