10 இடங்களில் மட்டுமேவிநாயகர் சிலைகளை கரைக்கலாம்

குமரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை 10 இடங்களில் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.

Update: 2023-09-12 21:26 GMT

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை 10 இடங்களில் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வது மற்றும் நீர்நிலைகளில் கரைப்பது குறித்து இந்து அமைப்பு நிர்வாகிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசியபோது கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் சொத்தவிளை, கன்னியாகுமரி, சின்னவிளை, சங்குத்துறை, வெட்டுமடை, மிடாலம், தேங்காப்பட்டணம் ஆகிய கடற்கரைகளிலும், பள்ளிக்கொண்டான் தடுப்பணைக் ணைக்கட்டு, திற்பரப்பு மற்றும் தாமிரபரணி ஆறு ஆகிய 10 இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும். சிலையின் உயரம், அதன் பீடம் மற்றும் அடித்தளத்துடன் சேர்த்து 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய வேண்டும். மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், பிற வழிபாட்டு தலங்கள் அருகில் சிலை வைக்க கூடாது.

மாலை 6 மணிக்குள்...

விநாயகர் சிலை வைக்கும் இடத்தில் அரசியல் கட்சி அல்லது சாதி தலைவர்களின் விளம்பர போர்டு கண்டிப்பாக வைக்க கூடாது. போதிய மின்விளக்குகள், ஜெனரேட்டர் வசதி செய்ய வேண்டும். சிலைகளை கரைப்பதற்காக கொண்டு செல்லும்போது 4 சக்கர வாகனங்களான மினி லாரி, டிராக்டர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். விநாயகர் சிலைகளை அறிவிக்கப்பட்ட இடத்தில் குறிப்பிடப்பட்ட நேரத்திற்குள் (பகல் 12 மணிக்கு முன்பு) கொண்டு செல்லப்பட வேண்டும். சிலை கரைப்புக்கான ஊர்வலம் போலீசார் வரையறுத்துக் கொடுத்த பாதை வழியாக மட்டுமே நடத்த வேண்டும். சூரியன் மறைவதற்குள் அதாவது மாலை 6 மணிக்குள் அனைத்து சிலைகளும் கரைக்கப்பட வேண்டும்.

தடையில்லா சான்று

ஒலிப்பெருக்கி அனுமதிக்கான தடையில்லா சான்று சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் பெற வேண்டும்.

களிமண்ணால் செய்யப்பட்ட மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா, நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், உதவி கலெக்டர் (பயிற்சி) ராஜட் பீட்டன், உசூர் மேலாளர் (குற்றவியல்) சுப்பிரமணியம், மாவட்ட வழங்கல் அலுவலர் விமலா ராணி, உதவி இயக்குனர்கள் விஜயகுமாரி (பேரூராட்சிகள்), சாந்தி (ஊராட்சிகள்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்