ஆன்லைன் ரம்மி தடை சட்டம் - அரசிதழில் வெளியீடு
ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறை சட்டம் 2022 அரசிதழில் வெளியானது
சென்னை,
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய சட்டம் இயற்றப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். இதனை தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் அரசு ஒரு குழுவை அமைத்தது. இக்குழு 27.6.2022 அன்று தனது அறிக்கையை முதல்-அமைச்சரிடம் சமர்ப்பித்தது.
அதன்பின், ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பான அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு, கடந்த செப்.26-ந் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்த அவசரச் சட்டம் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தநிலையில், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டங்களை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் வருகிற அக்டோபர் 17-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சட்டமாக இயற்றப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறை சட்டம் 2022 அரசிதழில் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறை சட்டத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, வரும் கூட்டத்தொடரிலேயே அவசரச் சட்டமாக இயற்றப்பட உள்ளது.
சட்டம் இயற்றப்பட்ட பின் தமிழ்நாட்டுக்குள் எந்த ஒரு நபரும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடமுடியாதவாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போன் எண்ணின் இருப்பிடத்தின் அடிப்படையில் மாநிலத்துக்குள் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை. ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களுக்கும் தடை. நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த ஒரு ஊடகங்களிலும், செயலிகளிலும் ஆன்லைன் சூதாட்ட விளம்பரம் வெளியிட தடை நடைமுறைக்கு வந்துவிடும்.
ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு ஆன்லைனில் பணப்பரிமாற்றம் செய்ய வங்கிகள் ஒத்துழைக்கவும் தடை. சூதாட்டம் அல்லாத இதரஆன்லைன் விளையாட்டுகளுக்கு, ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கவும் முடிவு செய்யப்படும். ஓய்வுபெற்ற தலைமைச் செயலாளர் தலைமையில் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறை ஆணையம் செயல்படும். ஆணையத்தின் உறுப்பினர்களாக (IT) ஐ.டி வல்லுநர், உளவியல் நிபுணர், ஆன்லைன் விளையாட்டு வல்லுநர் ஆகியோர் இடம் பெறுவர். ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்குவது, தொடர்ந்து கண்காணிப்பது, தரவுகளை சேகரிப்பது, குறைகளுக்கு தீர்வு காண்பது, விதிகளை மீறினால் நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பது உள்ளிட்ட பணிகளை ஆணையம் மேற்கொள்ளும்.
தண்டனை விவரங்கள்:-
ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு 3 மாத கால சிறை அல்லது ரூ.5,000 அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும். சூதாட்ட விளம்பரங்களை வெளியிடுவோருக்கு ரூ.5 லட்சம் அபராதம் அல்லது ஓராண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.
சூதாட்டத்தை நடத்தும் நிறுவனம் அல்லது நபர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் அல்லது 3 ஆண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும். இரண்டாம் முறை தவறிழைக்கும் நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு முந்தைய தண்டனையை விட இரட்டிப்பாக தண்டனை விதிக்கப்படும். ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தால் விதிக்கப்படும் தண்டனைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.