ஆன்லைன் கடன் மோசடி கும்பல் மிரட்டலால் உயிரை மாய்த்தது அம்பலம்

தக்கலை அருகே கல்லூரி மாணவர் தற்கொலையில் திடீர் திருப்பமாக ஆன்லைன் கடன் மோசடி கும்பலின் மிரட்டலால் உயிரை மாய்த்தது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. மேலும் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி சைபர் கிரைம் போலீசாரிடம் பெற்றோர் புகார் கொடுத்தனர்.

Update: 2023-09-02 18:45 GMT

தக்கலை, 

தக்கலை அருகே கல்லூரி மாணவர் தற்கொலையில் திடீர் திருப்பமாக ஆன்லைன் கடன் மோசடி கும்பலின் மிரட்டலால் உயிரை மாய்த்தது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. மேலும் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி சைபர் கிரைம் போலீசாரிடம் பெற்றோர் புகார் கொடுத்தனர்.

மாணவர் தற்கொலை

குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரன் (வயது 50). இவர் திக்கணங்கோடு ஊராட்சி முன்னாள் கவுன்சிலர். இவருடைய மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுடைய ஒரே மகன் குருநாத் (21). நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த மாதம் 24-ந் தேதி காலையில் குருநாத் வீட்டின் மாடியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

திடீர் திருப்பம்

மாணவர் பயன்படுத்திய லேப்டாப், செல்போன் போன்றவை ஆய்வு செய்யப்பட்டது. அப்போது ஆன்லைன் சூதாட்ட கும்பல் பல்வேறு செயலிகள் மூலம் கடன் வேண்டுமா? என கேட்டு அனுப்பிய குறுந்தகவல்கள் இருந்தன. இதனால் மாணவர் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.

பின்னர் நடத்திய விசாரணையில், கடன் கும்பலின் மிரட்டலால் மாணவர் உயிரை மாய்த்த அதிர்ச்சி தகவல் வெளியானது.

ஆன்லைன் கடன் மோசடி கும்பல்

அதாவது, மாணவர் குருநாத் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்காக கடன் ெசயலி மூலம் பணம் கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனை அடைத்த பின்னரும் அந்த கும்பல் அதற்கான வட்டியை கேட்டு தொடர்ந்து பல்வேறு எண்களில் இருந்து மிரட்டல் விடுத்து வந்துள்ளது.

இதனால் செய்வதறியாது பதறிய மாணவர் 'என்னிடம் வேறு பணம் இல்லை. என்னை தொந்தரவு செய்யாதீர்கள்' என கூறியுள்ளார். ஆனாலும் அந்த கும்பல் தொடர்ந்து தொந்தரவு செய்தது. அத்துடன் மாணவரிடம் இருந்து ஏற்கனவே வாங்கிய அனைத்து தரவுகளையும் கொண்டு அவரது வங்கி கணக்கில் ரூ.59 ஆயிரம் இருப்பு இருக்கிறது என்ற விவரத்தை அனுப்பியுள்ளனர்.

நிர்வாண மார்பிங் படம்

இதை பார்த்த மாணவர் வேறு வழியின்றி கடந்த 23-ந் தேதி அதாவது தற்கொலை செய்த முந்தைய நாள் மாலை 4.48 மணிக்கு ரூ.10 ஆயிரம் அனுப்பியுள்ளார். அதன் பிறகும் பணம் கேட்டு மிரட்டியதால் அவர்களிடம் மாணவர், ' எனது வங்கி கணக்கில் உள்ள பணம் பாட்டி எனது பெயரில் எல்.ஐ.சி. போட்டது. இந்த பணத்தை பெற்றோர் கேட்பார்கள். ஆகவே என்னை இனியும் தொந்தரவு செய்தால் செத்து போவதைவிட எனக்கு வேறு வழி இல்லை' எனக்கூறி கெஞ்சியுள்ளார்.

ஆனால் அந்த கும்பல் மாணவரின் கெஞ்சலை பொருட்படுத்தாமல் அவரது புகைப்படத்தை நிர்வாணமாக மார்பிங் செய்து அவரது செல்போனுக்கு அனுப்பி உள்ளனர். பின்னர் 'இந்த படத்தை உன் செல்போனில் இருக்கும் அனைவரின் வாட்ஸ் அப் எண்ணுக்கும் அனுப்பி விடுவோம்' என மிரட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர் மீண்டும் இரவு 9.34 மணிக்கு ரூ.18 ஆயிரம், இரவு 10 மணிக்கு ரூ.8 ஆயிரத்து 500 என 2 முறை பணம் அனுப்பியுள்ளார்.

மீண்டும் மிரட்டல்

இந்த நிலையில் மாணவர் தற்கொலை செய்த 24-ந் தேதி காலையில் மீண்டும் அந்த கும்பல் பணம் கேட்டு மிரட்டியுள்ளது. இதனால் அன்று காலை 9.50 மணிக்கு தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.12 ஆயிரத்து 600 அனுப்பிவிட்டு 'இனிமேல் என்னை தொந்தரவு செய்யாதீர்கள். நான் செத்துவிடுவேன்' என கூறியுள்ளார். அதற்கும் அசராத அந்த கும்பல் 'உன் நண்பர்களிடம் இருந்து பணத்தை வாங்கி அனுப்பு' என மீண்டும் மிரட்டியுள்ளது.

இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் 24-ந் தேதி காலை 10 மணிக்கு குருநாத் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

சைபர் கிரைம் போலீசாரிடம் புகார்

இந்த விவரங்களை திரட்டிய பெற்றோர் இதற்கான ஆதாரங்களுடன் மாவட்ட சைபர் கிரைம் போலீசிடம் புகார் கொடுத்தனர். அந்த புகாரை பதிவு செய்த போலீசார் ஆதாரங்களில் பதிவாகியிருக்கும் மோசடி கும்பல்களின் செல்போன் எண்கள், வங்கி கணக்கு எண்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்