ஆன்லைன் அபராத முறையை மறுபரிசீலனை செய்யக்கோரி 23-ந் தேதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் மனுமாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு
ஆன்லைனில் அபராதம் விதிக்கும் முறையை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி வருகிற 23-ந் தேதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் மனு கொடுப்பது என நாமக்கல்லில் நடந்த மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயற்குழு கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. மாநில தலைவர் தனராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கனரக வாகனங்களுக்கு ஆன்லைனில் அபராதம் விதிப்பது தற்போது அதிகரித்து வருவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
சாலை ஓரம், பெட்ரோல் பங்க் போன்றவற்றில் நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்கள், சாலைகளில் சென்று கொண்டு இருக்கும் வாகனங்களின் பதிவு எண்ணை மட்டும் குறித்து வைத்து கொண்டு என்ன குற்றம் என்றே கூறாமல் 'ஜெனரல் அபன்ஸ்' என்று அபராதம் விதிக்கப்படுகிறது.
தகுதி சான்றிதழ்
ஒப்பந்த அடிப்படையில் வட மாநிலங்களில் இயங்கி கொண்டு இருக்கும் வாகனங்களுக்கு தமிழகத்தில் அபராதம் விதிக்கப்படுகிறது. சாலை விதிகளை பின்பற்றவில்லை, சீட் பெல்ட் அணியவில்லை. ஹெல்மெட் அணியவில்லை என்பது போன்ற முரணான காரணங்களுக்காக அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. இவ்வாறு விதிக்கப்படும் அபராதங்கள் சம்பந்தமாக வாகன உரிமையாளர் வாகனத்திற்கான காலாண்டு வரி, தகுதி சான்றிதழ், பெர்மிட் பெறுவதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்படுகிறது.
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் மனு
எனவே இதுபோன்ற ஆன்லைனில் அபராதங்கள் விதிக்கும் முறையை ரத்து செய்து, வாகனத்தை நிறுத்தி ஆவணங்கள் உள்ளிட்டவைகளை சரிபார்த்து குற்றம் இருப்பின் அபராதம் விதிக்கும்பட்சத்தில் டிரைவரின் கையொப்பத்துடன் என்ன குற்றம், டிரைவர் பெயர், டிரைவர் உரிம எண்ணை ரசீதில் குறிப்பிட வேண்டும்.
எனவே இம்மாதிரியான ஆன்லைன் அபராத முறையை மறுபரிசீலனை செய்து, முறைப்படுத்த வேண்டும். நலிந்து வரும் லாரி தொழிலை பாதுகாத்து வாகன உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 23-ந் தேதி அனைத்து உறுப்பு சங்கங்களும் அவரவர் பகுதிகளில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அல்லது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுப்பது.
இந்த மனுவை தமிழக முதல்-அமைச்சர், தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், போக்குவரத்து துறை செயலாளர், போக்குவரத்துதுறை ஆணையர், காவல்துறை தலைமை இயக்குனர் ஆகியோருக்கு மின்னஞ்சலில் அனுப்புவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் சம்மேளன செயலாளர் ராமசாமி, பொருளாளர் தாமோதரன் மற்றும் சம்மேளன நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.