வரதட்சணை கொடுமை வழக்கில் ஒருவருக்கு சிறை தண்டனை
வரதட்சணை கொடுமை வழக்கில் ஒருவருக்கு சிறை தண்டனை விதித்து வள்ளியூர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
வள்ளியூர் (தெற்கு):
ராதாபுரம் கோலியான்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் ஆதிநாராயணன் (வயது 47). இவருக்கும், கலந்தபனையை சேர்ந்த விஜயராணி (47) என்பவருக்கும் கடந்த 1995-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் 2007-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை ஆதிநாராயணன் அடிக்கடி விஜயராணியிடம் பணம் கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார். மேலும் வேறொரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட விஜயராணியை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து விஜயராணி 2014-ம் ஆண்டு வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஆதிநாராயணன் உள்பட 3 பேர் மீது வரதட்சணை தடுப்பு சட்ட பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் ஆதிநாராயணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை வள்ளியூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி ஆனந்த் விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட ஆதிநாராயணனுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.