நாடு முழுவதும் ஒரே விலை திட்டம்

நாடு முழுவதும் ஒரே விலை திட்டம்

Update: 2022-12-20 18:45 GMT

கோவை

நாடு முழுவதும் உற்பத்தியாளர்கள் தங்களது பொருட்களை வியாபாரிகளுக்கு ஒரே விலையில் விற்கும் திட்டத்தை பிரதமர் மோடி அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தி உள்ளது.

பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 2022-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் கோவை அருகே உள்ள ஈச்சனாரியில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கினார். கோவை மாவட்ட தலைவர் ஜி.இருதயராஜா, மண்டல தலைவர்கள் செந்தில்நாதன், தமிழ்ச்செல்வம், ஜோதிலிங்கம ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில பொதுச்செயலாளர் வி.கோவிந்தராஜூலு வரவேற்றார். மாநில பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா ஆண்டறிக்கை வாசித்தார். கோவை மண்டல தலைவர் சூலூர் டி.ஆர்.சந்திரசேகரன் மற்றும் மண்டல தலைவர்கள் கிருபாகரன், வைத்திலிங்கம், சுப்பிரமணியம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி கூட்டத்தை தொடங்கி வைத்தனர்.

கூட்டத்தில் பங்கேற்ற ஏ.எம்.விக்கிரமராஜா புதிய கொடியை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒரே விலை

நாடு முழுவதும் உற்பத்தியாளர்களிடம் இருந்து சிறு வியாபாரிகள் பொருட்கள் வாங்கி விற்பனை செய்யும்போது விலை வித்தியாசம் ஏற்படுகிறது. ஆகவே நாடு முழுவதும் ஒரே விலை திட்டம் என்ற வகையில் இந்த விலையேற்றத்தை தடுக்க ஒரே நாடு, ஒரே வரி, ஒரே ரேஷன்கார்டு என்று இருப்பதுபோன்று ஒரே விலையில்தான் உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்ற திட்டத்தை பிரதமர் மோடி அறிவிக்க வேண்டும்.

தமிழகத்தில் மட்டும் 1 கோடி வணிகர்கள் உள்ளனர். நாடு முழுவதும் 21 கோடிபேர் இருக்கிறார்கள். ஆகவே மத்திய அரசு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் 10 அல்லது 15 ஆண்டுகளுக்குள் சிறு வியாபாரிகள் காணாமல்போய்விடுவார்கள்.

பிரதமரை சந்திக்க முடிவு

மேலும் வியாபாரிகளுக்கான சட்டப்பிரச்சினைகள், உணவு பாதுகாப்பு சட்டத்தில் மாற்றம், வணிகவரித்துறையில் மாற்றம் போன்ற பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளை சந்திக்க நேரம் கேட்கப்பட்டு உள்ளது. இந்த மாத இறுதிக்குள் மத்திய மந்திரிகளை சந்திக்க உள்ளோம்.

பிரதமர் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்தான். அவருக்கு வணிகர்களின் கஷ்ட, நஷ்டங்கள் புரியும். எனவே அவர் இது தொடர்பாக நல்ல நடவடிக்கையை எடுப்பார் என்று நாங்கள் நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், விவசாய விளைபொருட்களுக்கு செஸ் வரியை முழுமையாக நீக்க வேண்டும்.வணிக உரிமங்கள் அனைத்தும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் ஒற்றை சாளர முறையில் 3 ஆண்டுக்கு ஒருமுறை உரிமமாக மாற்றி வணிகர்கள் எளிதில் உரிமம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும், அடுத்த ஆண்டு (2023) மே மாதம் 5-ந் தேதி வணிகர்தின மாநில மாநாட்டை ஈரோட்டில் நடத்த வேண்டும்.

உயர்மட்டக்குழு

2017-ம் அண்டில் கொண்டு வரப்பட்ட ஜி.எஸ்.டி.யில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. ஈ-வே பில் நடைமுறை, பில்லில் உள்ள சிறு சிறு தவறுகள், டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறை, அதிகார அத்துமீறல்கள் அனைத்தையும் களைந்திட உயர்மட்டக்குழுவை உருவாக்கி அதில் வணிகர் சங்க பிரதிநிதிகளையும் இடம்பெற செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் கோவை மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.கணேசன், பொருளாளர் வஹாப், மாநகர செயலாளர் பாக்கியநாதன், மாநில துணை தலைவர் அரோமா பொன்னுசாமி, மாநில இளைஞர் அணி செயலாளர் பாலன், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் பொன்.செல்வராஜ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வேலுமயில், துணைத்தலைவர் தர்மராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்