வெவ்வேறு விபத்துகளில் ஒருவர் பலி
சிவகாசி பகுதிகளில் வெவ்வேறு விபத்துகளில் ஒருவர் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
சிவகாசி,
சிவகாசி பகுதிகளில் வெவ்வேறு விபத்துகளில் ஒருவர் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
டிரைவர் பலி
சிவகாசியில் இருந்து தென்காசிக்கு நேற்று மதியம் தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. பஸ் அவுசிங் போர்டு போலீஸ் செக் போஸ்ட் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த பயணிகள் வேன் ஒன்று பஸ் மீது பயங்கரமாக மோதியது.
இதில் வேனின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. வேனை ஓட்டி வந்த மாரனேரி ஈஸ்வரன் காலனியை சேர்ந்த மாடசாமி மகன் கணேசன் (வயது55) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் வேனில் இருந்து அவரது உடலை மீட்க முடியாமல் போனது. பின்னர் சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் மீட்புகுழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வேனில் சிக்கி இருந்த கணேசனின் உடலை மீட்டனர். இந்தவிபத்தால் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. இந்த விபத்து குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்றொரு சம்பவம்
மாரனேரி கிச்சநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் அன்பழகன் (29). சம்பவத்தன்று அன்பழகன், அவரது மனைவி கவிதா (25), மகள் வேதஸ்ரீ (2) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சித்துராஜபுரம்- போடு ரெட்டியபட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கிச்சநாயக்கன்பட்டி கருப்பசாமி காலனியை சேர்ந்த ராமர் மகன் முனியாண்டி, அன்பழகன் வாகனத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் அன்பழகன், கவிதா, வேதஸ்ரீ ஆகியோருக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து அன்பழகன் மாரனேரி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் முனியாண்டி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.