ரவுடி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
சீர்காழி அருகே ரவுடி கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே ரவுடி கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
ரவுடி கொலை
சீர்காழி அருகே கொண்டல் வடக்கு தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன் மகன் தினேஷ் (வயது 27).சாராயம் வியாபாரி. இவர் மீது சீர்காழி, புதுப்பட்டினம், செம்பனார்கோவில் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழக்கு உள்ளது. சீர்காழி போலீஸ் நிலையத்தில் இவரது பெயர் ரவுடி பட்டியலில் உள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம்(டிசம்பர்) 25-ந்தேதி சீர்காழி அருகே உள்ள கோவில்பத்து பள்ளிக்கூடம் அருகில் உள்ள ஒரு வயல்வெளியில் இரவு நேரத்தில் நண்பர்களோடு தினேஷ் மது அருந்தி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 4 பேர் தினேசை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர். இது தொடர்பாக சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்தன் (27), சரண்ராஜ் (39), சிலம்பரசன் (33), மணிகண்டன் (25), முகேஷ் (20) ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்தவர்களை தேடி வந்தனர்.
மேலும் ஒருவர் கைது
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தினேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய செட்டிகுளம் சந்து பகுதியை சேர்ந்த மூக்கையன் மகன் முத்துப்பாண்டி (22) மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருப்பதாக சீர்காழி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் மயிலாடுதுறைக்கு சென்று முத்துப்பாண்டியை கைது செய்து நாகை சிறையில் அடைத்தனர்.