பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் ஒருவர் கைது

கோவையில் இந்து முன்னணி பிரமுகரின் கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-28 18:45 GMT

கோவை

கோவையில் இந்து முன்னணி பிரமுகரின் கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

பெட்ரோல் குண்டு வீச்சு

கோவையில் உள்ள பா.ஜனதா அலுவலகம் மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.

இது தொடர்பாக போலீசார் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே பா.ஜனதா அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த நிர்வாகியான துடியலூர் சதாம் உசேன் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகிறார்கள்.

2 பேர் கைது

இதற்கிடையே கடந்த 23-ந் தேதி கோவை குனியமுத்தூரை சேர்ந்த இந்து முன்னணி செயற்குழு உறுப்பினரான தியாகு என்பவர் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு சேதப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த ஜேசுராஜ், இலியாஸ் ஆகியோரை கைது செய்து இருந்தனர்.

அவர்களிடம் தீவிர விசாரணை நடத்திய பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் 2 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

மேலும் ஒருவர் சிக்கினார்

இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய கோவை திருவள்ளுவர் நகரை சேர்ந்த அப்துல் என்ற அம்ரிஷ்கான் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.

பின்னர் அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்துச்சென்று ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்