ஜாமீனில் வந்தவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது
திண்டிவனம் அருகே ஜாமீனில் வந்தவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
திண்டிவனம்,
திண்டிவனம் தீர்த்தகுளம் பகுதியை சேர்ந்தவர் சுப்புராயன் மகன் பெருமாள்(வயது 49). இவர் தற்போது திண்டிவனம் அடுத்த சாரம் ரெட்டியார் தெருவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் லாட்டரி சீட்டு விற்ற வழக்கு தொடர்பாக கடந்த ஜூன் மாதம் 22-ந்தேதி பெருமாளை ஒலக்கூர் போலீசார் கைது செய்து திண்டிவனம் சிறையில் அடைத்தனர். இதையடுத்து சில நாட்களில் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் பெருமாள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது நண்பர்கள் 2 பேருடன் சலவாதி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அப்போது அங்கு வந்த ஈச்சேரி கிராமத்தை சேர்ந்த சேட்டு என்கிற ஜெயக்குமார், முருங்கப்பாக்கம் பகுதியை சேர்ந்த அன்பு என்கிற அன்புராஜ்(31), சாரம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரபிரசாத்(24) ஆகியோர் பெருமாளிடம் தகராறு செய்ததுடன், பெருமாளை கத்தியால் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த பெருமாள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன், இதுபற்றி ரோஷணை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, அன்புராஜ், ராஜேந்திர பிரசாத்தை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த ஜெயக்குமாரை தேடி வந்தனர். இந்த நிலையில் திண்டிவனம் அடுத்த ஈச்சேரி டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்த ஜெயக்குமாரை ரோஷணை போலீசார் கைது செய்தனர்.