வாணியம்பாடியில் ஒரு மாதம் சிறப்பு மருத்துவ முகாம்
வாணியம்பாடியில் பன்றி காய்ச்சலுக்கு வியாபாரி பலியான பகுதியில் ஒரு மாதம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் என சுகாதார பணிகள் துணை இயக்குனர் தெரிவித்தார்.
வியாபாரி பலி
வாணியம்பாடியில் மளிகைக்கடை நடத்தி வந்த ரவிக்குமார் (வயது 50) என்பவர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து அந்தப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ முகாம் நடைபெற்றது.
வேலூர் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் தனலட்சுமி மற்றும் சுகாதார துணை இயக்குனர் செந்தில் ஆகியோர் நேரில் பார்வையிட்டு, அந்தப்பகுதியில் நடைபெறும் சுகாதார பணிகளை துரிதப்படுத்தினர்.
இது தொடர்பாக, திருப்பத்தூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் டி.ஆர்.செந்தில் கூறியதாவது:-
ஒரு மாதம்
வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் மளிகைக் கடை உரிமையாளர் ரவிக்குமார் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்த நிலையில், ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையில் இங்கு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.
இந்த மருத்துவ முகாம் ஒரு மாத காலத்திற்கு நடைபெறும், காய்ச்சல் மற்றும் இருமல் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து மாதிரிகளை சேகரித்து வாலாஜாவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி உடனடியாக அறிக்கை பெற்று அதன் பின்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் இப்பகுதியில் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் முன்னெச்சரிக்கையாக வந்து பரிசோதனை செய்து கொள்ளலாம். பன்றி காய்ச்சலுக்கான மாத்திரை, மருந்துகள் அதிகமாக உள்ளது. மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை, சுகாதாரப்பணிகள் இப்பகுதி முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார், நகர தி.மு.க. செயலாளர் வி.எஸ்.சாரதி குமார், சுகாதார அலுவலர்கள் செந்தில்குமார், சரவணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.