விளாத்திகுளம் பகுதியில் ஒரு கோடி மரம் வளர்ப்பு திட்ட ஆலோசனை கூட்டம்

விளாத்திகுளம் பகுதியில் ஒரு கோடி மரம் வளர்ப்பு திட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-06-27 14:35 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் ஒரு கோடி மரங்கள் நடும் கனவு திட்டம் குறித்து மக்கள் மரங்கள் இயக்கம் சார்பாக தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், ஆளுக்கு ஒரு மரம் நடுவோம். நாளுக்கொரு வரம் பெறுவோம் என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில், அனைவரும் இணைந்து நம் சட்டமன்ற தொகுதி முழுவதும் ஒரு கோடி மரங்களை நடும் இந்த சிறப்பு முயற்சியில் பங்கேற்க வேண்டும்" என்றார். மேலும் 5 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த மரங்களினால் சட்டமன்ற தொகுதிக்கு வரக்கூடிய சுற்றுச்சூழல், பொருளாதார ரீதியான பலன்கள் பற்றியும் விளக்கிக்கூறினார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை அதிகாரிகள், பேரூராட்சி நிர்வாகத்தினர், காவல் துறையினர், சமூக ஆர்வலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், பொதுமக்கள் என அனைவரிடமும் இத்திட்டம் குறித்து கருத்துக்கள் கேட்கப்பட்டது.

மேலும், எட்டயபுரத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று முன்தினம் பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது. நேற்று 2-வது நாளாக சின்ன மாடு, பெரிய மாட்டுவண்டி போட்டிகள் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாட்டு வண்டி பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

எட்டயபுரம் - விளாத்திகுளம் நெடுஞ்சாலையில் பாரதி நூற்பாலை முன்பாக தொடங்கி சாலையின் இருபுறத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்று ஆரவாரத்துடன் போட்டியை கண்டு ரசித்தனர்.

அதனை தொடர்ந்து எட்டயபுரம் தெப்பக்குளம் அருகே நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலர் நவநீத கண்ணன், பேரூர் கழக செயலாளர் பாரதி கணேசன், முன்னாள் நகர செயலர் சங்கர பாண்டியன் ஆகியோர் வெற்றி பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கும், மாட்டு வண்டி சாரதிகளுக்கும் ரொக்கத்தொகை மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கினர். நிகழ்ச்சியில் தி.மு.க ஒன்றிய செயலர்கள் காசி விஸ்வநாதன், ராமசுப்பு, அன்பு ராஜன், மும்மூர்த்தி, சின்ன மாரிமுத்து, ராதாகிருஷ்ணன், செல்வராஜ், பேரூர் கழக செயலர் வேலுச்சாமி, இளம்புவனம் பஞ்சாயத்து தலைவர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்