பள்ளிபாளையத்தில் விசைத்தறி தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு ஒருவர் கைது
பள்ளிபாளையத்தில் விசைத்தறி தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு ஒருவர் கைது
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அடுத்த தாஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 60). விசைத்தறி தொழிலாளி. இவரும் வீராசாமி (55) என்பவரும் ஒரே விசைத்தறி கூடத்தில் வேலை செய்து வருகின்றனர். இருவருக்கும் தார் குச்சி கணக்கு எண்ணியது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் விசைத்தறி கூடம் முன் வேணுகோபால், மருமகன் வீரமணி, நண்பர் சரவணன் ஆகியோருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வீராசாமி தகாத வார்த்தைகளால் வேணுகோபாலை திட்டியதுடன் கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் கோபம் அடங்காத வீராசாமி தான் கொண்டு வந்த அரிவாளால் வேணுகோபாலின் தோள்பட்டையில் வெட்டினார். இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீராசாமியை கைது செய்தனர்.