தொழிலாளியின் மோட்டார் சைக்கிளில் இருந்து ரூ.50 ஆயிரம் திருட்டு

எட்டயபுரத்தில் தொழிலாளியின் மோட்டார் சைக்கிளில் இருந்து ரூ.50 ஆயிரத்தை திருடிசென்ற இரண்டு மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2022-12-08 18:45 GMT

எட்டயபுரம்:

எட்டயபுரத்தில் தொழிலாளி மோட்டார்சைக்கிளில் இருந்து ரூ.50 ஆயிரத்தை துணிகரமாக திருடி சென்ற 2 மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

கட்டிட தொழிலாளி

எட்டயபுரம் அருகே உள்ள பொன்னையாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (45). கட்டிடத் தொழிலாளி. இவர் நேற்று மாலையில் எட்டயபுரம் மெயின் பஜாரில் உள்ள ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்து வங்கிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். வங்கியில் இருந்து ரூ.50 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்த அவர், மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில் உள்ள பெட்ரோல் டேங்க் பையில் பணத்தை வைத்துள்ளார். பின்னர் பஜாரில் உள்ள கடையில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கச் சென்றார்.

ரூ.50ஆயிரம் திருட்டு

கடைக்கு வெளியே பணத்துடன் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்று பொருட்கள் வாங்கியுள்ளார். கடையில் இருந்து அவர் திரும்பி வந்தபோது, மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் பணம் திருடப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியில் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு, பஜார் பகுதியில் உள்ள கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

2 மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அவர் கடைக்கு சென்ற சிறிது நேரத்தில், 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பணத்தை திருடி செல்வது பதிவாகி இருந்தது. கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்ம நபர்கள், சக்திவேலை வங்கியிலிருந்து பின்தொடர்ந்து வந்து பணத்தை திருடி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பாக எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வங்கியிலிருந்து சக்திவேலை பின்தொடர்ந்து வந்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்