கம்பத்தில் வீரப்பநாயக்கன் குளத்தின் கரையை சீரமைக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
கம்பத்தில் வீரப்பநாயக்கள்குளத்தின் கரையை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்
கம்பம் பகுதிகளில் வீரப்பநாயக்கன்குளம், உடைப்படிகுளம், ஒட்டுக்குளம் உள்ளிட்ட குளங்கள் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ளது. இந்த குளங்களில் முல்லைப்பெரியாறில் இருந்து வரும் தண்ணீரை தேக்கி வைத்து நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த குளத்தின் கரை வழியாக விளை நிலங்களுக்கு விளை பொருட்களை டிராக்டர் மூலம் விவசாயிகள் கொண்டு செல்கின்றனர். மேலும் கம்பத்தில் இருந்து நாராயணத்தேவன்பட்டிக்கு செல்வதற்கு பொதுமக்கள் இந்த பாதையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த கரை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளித்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் குளத்தின் கரை சேறும், சகதியுமாக மாறி வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே குளத்தின் கரையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.