கம்பத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்துக்கு 'சீல்' வைப்பு

கம்பத்தில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

Update: 2022-10-13 18:45 GMT

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தொடர்புடைய நாடு முழுவதும் 15 மாநிலங்களில் 93 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி பலரை கைது செய்தனர். இதில் மதுரை மண்டல செயலாளரான கம்பத்தைச் சேர்ந்த யாசர் அராபத் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இந்த சோதனையின் அடிப்படையில் மத்திய அரசு, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்து 5 ஆண்டுகள் இந்தியாவில் செயல்பட தடை விதித்தது. மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்தும் விதமாக தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடைவிதித்து அரசாணை வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் உள்ள அந்த அமைப்பின் அலுவலகங்கள் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டு வருகின்றன.

அலுவலகம் 'சீல்' வைப்பு

அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனி அருகே உள்ள முத்துதேவன்பட்டியில் செயல்பட்டு வந்த அறிவகம் என்ற "இஸ்லாமிய பயிற்சி" பள்ளியை வருவாய்த்துறை அதிகாரிகள் பூட்டி 'சீல்' வைத்தனர். இதைத்தொடர்ந்து கம்பம் முகைதீன் ஆண்டவர்புரம் தெருவில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திற்கு நேற்று 'சீல்' வைக்கப்பட்டது.

இதில் உத்தமபாளையம் தாசில்தார் சந்திரசேகரன், வருவாய் ஆய்வாளர் நாகராஜ், உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) சுரேஷ், கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் அலுவலகத்தை பூட்டி 'சீல்' வைத்தனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்