உலக யானைகள் தினத்தையொட்டிஊட்டி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

உலக யானைகள் தினத்தையொட்டி ஊட்டி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி சென்றனர்.

Update: 2023-08-10 18:45 GMT

ஊட்டி அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணியாக சென்ற காட்சி. 

ஊட்டி: உலக யானைகள் தினத்தையொட்டி ஊட்டி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி சென்றனர்.

உலக யானைகள் தினம்

உலகளவில் யானைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 12-ந்தேதி உலக யானைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் உலக யானைகள் தினத்தை முன்னிட்டு ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பங்கேற்றவர்களை கல்லூரி பேராசிரியை ராஜேஸ்வரி வரவேற்றார். முதல்வர் அருள் ஆண்டனி தலைமை தாங்கினார்.இதில் கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் கலந்து கொண்டு பேசியதாவது:-

இந்தியாவில் யானைகள் கடுமையான வாழ்விட இழப்பு, தனியார் காவலில் கொடுமை மற்றும் தந்தங்களுக்காக வேட்டையாடுதல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ளது. யானைகள், மக்களுடனான மோதலை குறைக்க அதன் வாழ்விடத்தை பாதுகாப்பது முக்கியம் ஆகும். தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளில் தந்தத்திற்காக வேட்டையாடுவதை நிறுத்த சட்டங்களை கடுமையாக அமல்படுத்துவது மற்றும் அதற்காக பிற நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும். இதற்காக இந்தியாவில் யானைகள் பாதுகாப்புக்கு அனைத்து தரப்பினரின் ஆதரவும் தேவை.

விழிப்புணர்வு பேரணி

தமிழகத்தில் இறந்த 1,544 யானைகளின் பிரேத பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்ததில், 75 காரணங்களுக்காக யானைகள் இறப்பது தெரியவந்தது. இதில் குடல் புழுக்கள் தாக்குதல், மின்சாரம் தாக்குதல், வேட்டைக்காக யானைகள் கொல்லப்படுதல் மற்றும் இனப்பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தங்களுக்குள் சண்டையிடுதல் ஆகியவை முக்கிய காரணங்களாகும். எனவே, மேற்கண்ட காரணங்களால் யானைகள் இறப்பதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தமிழகத்தில் மின்வேலி அமைக்க தற்போது ஏற்படுத்தப்பட்டு உள்ள கட்டுப்பாடுகள் திருப்தி அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

முடிவில் பேராசிரியர் முருக பாரதி நன்றி கூறினார்.

இதற்கிடையே உலக யானைகள் தினத்தையொட்டி அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் மாணவ-மாணவிகள் யானை முக உருவம் கொண்ட முக மூடியை அணிந்து பங்கேற்று கல்லூரியில் இருந்து சேரிங்கிராஸ் பகுதி வரை சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Tags:    

மேலும் செய்திகள்