ஆடித்திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் கோவிலில் குவிந்த பக்தர்கள்- நாளை தேரோட்டம் நடக்கிறது
கள்ளழகர் கோவிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு விடுமுறை தினமான நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். நாளை தேரோட்டம் நடக்கிறது.
அழகர்கோவில்,
கள்ளழகர் கோவிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு விடுமுறை தினமான நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். நாளை தேரோட்டம் நடக்கிறது.
ஆடித்திருவிழா
மதுரை மாவட்டம் அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிக முக்கியமானது. ஆடிப்பெருந்திருவிழாவாகும். இந்த விழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் அன்னம், சிம்மம், அனுமன் உள்ளிட்ட பல வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் அலங்கரிக்கப்பட்ட தேரில், பெருமாள், தேவியர்களுடன், எழுந்தருள்வார். தொடர்ந்து காலை 8 மணிக்கு மேல், 8.35 மணிக்குள் தேர் வடம் பிடித்தல் நடைபெறும். 2-ந் தேதி புஷ்ப சப்பரம், 3-ந் தேதி ஆடி 18-ம் பெருக்கு உற்சவ சாந்தி நடைபெறும்.
சாமி தரிசனம்
இந்நிலையில் நேற்று விடுமுறை நாள் என்பதால் அதிகாலை முதல் மாலை வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து குவிந்தனர். அங்குள்ள அழகர்மலை நூபுரகங்கை ராக்காயி அம்மன், ஆறாவது படைவீடு சோலைமலை முருகன், கள்ளழகர் பெருமாள், மற்றும் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி ஆகிய கோவில்களில் நீண்ட வரிசையில் நின்று நெய் விளக்குகள் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.
அழகர்கோவிலுக்கு நேற்று வந்த மதுரை உள்ளிட்ட வெளி மாவட்ட பக்தர்கள், கோட்டை வாசல் வளாகத்தில் பொங்கல் வைத்து கிடாய் வெட்டி வழிபாடு செய்தனர். ஆடி திருவிழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.