தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சென்னிமலை முருகன்
தமிழ் புத்தாண்டு நேற்று பிறந்தது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன்படி சென்னிமலை முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. முதலில் கோமாதா பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து முருகப்பெருமானுக்கு தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழக்கமாக நடைபெறும் 6 கால பூஜைகள் நடைபெற்றது. இதில் உள்ளூர் மட்டுமின்றி திருப்பூர், நாமக்கல், சேலம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களின் வசதிக்காக அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல கோவிலுக்கு சொந்தமான பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டது.
தொட்டம்பட்டி
இதேபோல் சென்னிமலை அருகே தொட்டம்பட்டியில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் மழை வேண்டி வருண பூஜை நடைபெற்றது. எக்கட்டாம்பாளையம், அய்யம்பாளையம், சொக்கநாதபாளையம் ஆகிய ஊர்களில் உள்ள மாரியம்மன் கோவில்கள் உள்ளிட்ட கிராமப்புற கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பண்ணாரி மாரியம்மன்
சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் நீண்ட வரிசையில் சென்று பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். அங்குள்ள குண்டத்தில் இருந்து சாம்பலை எடுத்து நெற்றியில் விபூதியாக பூசிகொண்டனர். பெண்கள் ஒரு தட்டில் தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர்.
பக்தர்கள் பலர் உப்பு, மிளகு கலந்து குண்டம் அருகே தூவி அம்மனை வணங்கி சென்றார்கள். தமிழ் புத்தாண்டு காரணமாக நேற்று சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் விடப்பட்டது. மேலும் சத்தியமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் உள்ள தண்டு மாரியம்மன் கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது.
பவானி
பவானியில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில், செல்லியாண்டி அம்மன் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், பழனியாண்டவர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மேலும் பக்தர்கள் பவானி கூடுதுறையில் தீர்த்தம் எடுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர்.
கோபி
கோபியில் சாரதா மாரியம்மன் கோவிலில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு வாசனை திரவியங்கள் அடங்கிய அபிஷேகங்கள் செய்யப்பட்டது. சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி அம்மன் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் கோபி வேலுமணி நகர் சக்தி விநாயகர் கோவில், கோபி ஆஞ்சநேயர் கோவில், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், அமர பணீஸ்வரர் கோவில், பவளமலை முத்துக்குமாரசுவாமி கோவில், பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மாதேஸ்வரர்- முத்து மாரியம்மன்
கோபி அருகே கூகலூரில் மீனாட்சி அம்பிகை நஞ்சுண்டேஸ்வரர் கோவில் மற்றும் தபால் அலுவலகம் வீதியில் 6 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலும் அங்குள்ள சக்தி மாரியம்மன் கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது. கோபி ஈஸ்வரன் கோவில் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீவிசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. கோபி மாதேசியப்பன் வீதியில் அமைந்துள்ள மாதேஸ்வரர் கோவிலில் மாதேஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடந்தது. கோபி டவுன் வடக்கு வீதியில் பெரம்பலூர் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று முத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது.
சிவகிரி-அந்தியூர்
சிவகிரி அருகே உள்ள சடையப்ப சாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல் அந்தியூர் பத்ரகாளி அம்மன் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. சந்தன காப்பு அலங்காரத்தில் பச்சை பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அந்தியூர் செல்லீஸ்வரர் கோவில், ஆஞ்சநேயர் கோவில், விநாயகர் கோவில், பேட்டை பெருமாள் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
கொடுமுடி
கொடுமுடியில் மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் உள்ள அனைத்து சாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டன.
இதனையொட்டி மகுடேஸ்வரர் சவுந்தரநாயகி அம்பாளும், ஸ்ரீதேவி பூதேவியுடன் வீரநாராயண பெருமாளும் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது. இங்கு வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் வந்து காவிரியில் புனித நீராடி அனைத்து சன்னதிகளிளும் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
ஊஞ்சலூர்
ஊஞ்சலூர் நாகேஸ்வரர் கோவிலில் உற்சவ மூர்த்தியான நாகேஸ்வரர், அம்மன் சிலைகளுக்கு 16 வகையான வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
அம்மாபேட்டை
அம்மாபேட்டை காவிரி கரையில் அமைந்துள்ள மீனாட்சி சொக்கநாதர் கோவிலின் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.