வெள்ளி கவச அலங்காரத்தில் எழுந்தருளிய விநாயகர்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமேசுவரம் உள்பட பல்வேறு கோவில்களில் கொழுக்கட்டை படையலிட்டு விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. ேமலும் வெள்ளி கவச அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலித்தார்.

Update: 2023-09-18 18:45 GMT

ராமேசுவரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமேசுவரம் உள்பட பல்வேறு கோவில்களில் கொழுக்கட்டை படையலிட்டு விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. ேமலும் வெள்ளி கவச அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலித்தார்.

விநாயகர் சதுர்த்தி விழா

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் உள்ள விநாயகருக்கும் நேற்று வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு கொழுக்கட்டை படையலிடப்பட்டும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றன. அதுபோல் கோவிலிலிருந்து விநாயகர் பெருமான் வெள்ளி மூஷிக வாகனத்தில் பஸ் நிலையம் அருகே உள்ள காட்டு பிள்ளையார் கோவிலுக்கு எழுந்தருளினார்.தொடர்ந்து அங்கிருந்து மீண்டும் விநாயகர் அதே வாகனத்தில் கோவிலுக்கு வந்தடைந்தார்.

பின்னர் இரவு 7 மணிக்கு விநாயகர் தங்க சிம்ம வாகனத்தில் கோவிலில் இருந்து எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கொழுக்கட்டை படையல்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமநாதபுரம், பரமக்குடி, மண்டபம், உச்சிப்புளி, தேவிபட்டினம், திருவாடானை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள விநாயகர் கோவிலில் நேற்று கொழுக்கட்டை படையலிடப்பட்டும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கீழக்கரையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தட்டாதோப்பில் அமைந்துள்ள வரசக்தி விநாயகர் கோவிலில் மூலவர் விநாயகருக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பூஜைகளை பூஜகர் விஸ்வநாதன் செய்திருந்தார்.

வெள்ளி காப்பு அலங்காரம்

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் முன்பு உள்ள கைலாச விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி கைலாச விநாயகருக்கு பால், பஞ்சாமிர்தம், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கைலாச விநாயகர் வெள்ளி காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து தீபாராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைகளை ரவி சிவாச்சாரியார் சொர்ண சந்திரசேகர், சிவாச்சாரியார் ஆகியோர் நடத்தினர். ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்